Ind vs SA1st Test: இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான கொல்கத்தா டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

Continues below advertisement

இந்தியா - தென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர்:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்கா அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, முதல்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. உள்ளூர் போட்டியில் வீழ்த்த மிகவும் கடினமான இந்திய அணிக்கு எதிராக, உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்ரிக்கா அணி மோதும் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கில் தலைமையில் உள்ளூரில் மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றிருந்தாலும், தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான தொடர் மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

Continues below advertisement

இந்தியா - தென்னாப்ரிக்கா - பலம், பலவீனம்:

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்த இந்திய அணி , உள்ளூரில் மீண்டும் டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது. உள்ளூரில் மிகவும் பிரபலமான ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, கில் அணிக்கு மிகவும் சாதகமானதாக கருதப்படுகிறது. அதேநேரம், தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்ரிக்கா அணிக்கு இந்திய சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்வதும், சுழற்பந்து வீச்சை சமாளிப்பதும் கடினமாக இருக்கும் என கருதப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

ஸ்பின் மேஜிக்:

கொல்கத்தா போட்டியின் முடிவை தீர்மானிப்பதில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்காற்ற உள்ளனர். இந்திய அணியை பொறுத்தவரையில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தென்னாப்ரிக்காவை கலங்கடிக்க கூடிய பலமாக இருக்கக் கூடும். அதேநேரம், எதிரணியிலும் கடும் சவாலை அளிக்கக் கூடிய மஹாராஜ் மற்றும் செனுரன் முத்துசாமி ஆகிய உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். இதனால், இது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இடையேயான சவாலாகவும் கருதப்படுகிறது. அதேநேரம், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ரபாடா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஈடன் கார்டன் மைதானம் எப்படி? - வானிலை:

இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் ஆடுகளம் மற்றும் வானிலை முக்கிய பங்கு வகிக்கும் என கருதப்படுகிறது. கொல்கத்தாவின் வெப்பநிலை காரணமாக, காலை நேரங்களில் பந்துவீச்சாளர்கள் ஈடன் கார்டனில் ஆதிக்கம் செலுத்த முடியும். நேரம் செல்ல செல்ல இது சுழற்பந்து வீச்சாளர்களுக்கான கோட்டையாக மாறும். முதலில் பேட்டிங் செய்து, மிகப்பெரிய ஸ்கோரை பதிவு செய்வது நல்ல முடிவாக இருக்கும். முதல் இரண்டு நாட்களில் ஆதிக்கம் செலுத்தும் அணியே, ஈடன் கார்டன் மைதான போட்டிகளில் அதிகளவில் வெற்றியை பதிவு செய்துள்ளன. போட்டியின் போது மழைக்கு பெரிய வாய்ப்பு இல்லை என்றும் வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியா - தென்னாப்ரிக்கா: நேருக்கு நேர்

இரு அணிகளும் இதுவரை 44 முறை டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 16 முறையும், தென்னாப்ரிக்கா 18 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இந்தியாவில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 19 டெஸ்ட் போட்டிகளில் , இந்தியா 11 போட்டிகளில் வென்று 5 தோல்விகளை பதிவு செய்துள்ளது. 2010ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தென்னாப்ரிக்கா வெற்றி பெற்றது இல்லை.

உத்தேச ப்ளேயிங் லெவன்:

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கே), ரிஷப் பண்ட் (வி.கீ.,), துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா

தென்னாப்பிரிக்கா: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், டோனி டி ஜோர்ஜி, டெம்பா பவுமா (கே), டெவால்ட் ப்ரீவிஸ், கைல் வெர்ரேய்ன் (வி.கீ.,), மார்கோ ஜான்சன், சைமன் ஹார்மர், கேசவ் மகாராஜ், செனுரன் முத்துசாமி, காகிசோ ரபாடா