ஐ.பி.எல் தொடர் தொடங்கியதில் இருந்தே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் எம்.எஸ். தோனி. அவர் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இல்லை, ஐபிஎல் தொடரும் இல்லை என்றே ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வியும், குழப்பமும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதற்கு சூசகமான ஒரு பதிலை அளித்துள்ளது சிஎஸ்கே. அது என்ன என்பதை பார்க்கலாம்.
தோனி விளையாடுவதை உறுதி செய்த சிஎஸ்கே(CSK)
கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ். தோனி ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, ஐ.பி.எல். தொடரில் அவர் விளையாடுவது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று எம்.எஸ். தோனி தெரிவித்திருந்தார். ஆனாலும், அவர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் விளையாட மாட்டார் என்று வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில், 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக சி.எஸ்.கே. அணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், தோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்று ரசிகர்கள் கேட்பது போல் உள்ளது. அதற்கு ONE LAST TIME என்று பதில் கொடுத்து, தோனி ரசிகர்களை சி.எஸ்.கே. அணி உற்சாகப்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறும் 19-வது ஐபிஎல் சீசன்
19-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, வீரர்களுக்கான மினி ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும். அதற்குள், தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 18-வது சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றிலேயே, சென்னை கடைசி இடத்தை பிடிப்பது அதுவே முதல் முறை. இதில் ஆரம்பத்தில் சில போட்டிகளில் ஆடிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து, கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டார். ஆனால், அவரது தலைமையிலும் சுமாராகவே ஆடிய சென்னை அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
இதனிடையே, 44 வயதான தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா, மாட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. ஆனால், ஓய்வு குறித்து முடிவெடுப்பதற்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது என்று கடைசி போட்டியின் முடிவில் தோனி கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது அடுத்த சீசன் நெருங்கும் வேளையில், தோனி ஓய்வு குறித்த கேள்விகள் எழத்தொடங்கி உள்ளன. அதற்கு பதில் அளிக்கும் வகையில் தான் சிஎஸ்கே தற்போது வீடியோவை வெளியிட்டுள்ளது.