தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இன்று களம் இறங்குகிறது. 


இந்திய அணி இந்தாண்டு மோதும் கடைசி போட்டி என்பதால் வெற்றியுடன் முடிக்க விரும்பும். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 


இந்தப் போட்டியில் இந்திய ரசிகர்களின் பார்வை நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மீதுதான் இருக்கும். இன்றைய போட்டியில் விளையாடி கோலி, மேலும் ஒரு உலக சாதனையை படைக்க உள்ளார். இந்த போட்டியில் கோலி 66 ரன்கள் எடுத்தால், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரவை முந்துவார். கோலி இதுவரை ஆறு முறை ஒரு காலண்டர் ஆண்டில் 2000 அல்லது அதற்கு மேற்பட்ட சர்வதேச ரன்களை கடந்துள்ளார். இதேபோல், சங்கக்காரவும் 6 முறையும் கடந்துள்ளார். கோலி இதற்கு முன் 2012, 2014, 2016, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் 2000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இந்தாண்டு, விராட் கோலி இதுவரை 1,934 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 66 ரன்கள் எடுத்தால் 7 முறை 2,000 ரன்களை கடந்து புதிய சாதனை படைப்பார். 


ஒரு காலண்டர் ஆண்டில் அதிக முறை 2000 ரன்கள்:



  • விராட் கோலி - 6

  • குமார் சங்கக்கார - 6

  • மஹேல ஜெயவர்த்தனே - 5

  • சச்சின் டெண்டுல்கர் - 5

  • ஜாக் காலிஸ் - 4


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி சிறப்பான சாதனை படைத்துள்ளார். கோலி இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் 56.18 சராசரியில் மூன்று சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்கள் உள்பட 1236 ரன்கள் எடுத்துள்ளார்.


அதேபோல், கோலி தென்னாப்பிரிக்க மண்ணிலும் சிறந்த சாதனை படைத்துள்ளார். இவர் 7 டெஸ்ட் போட்டிகளில் 719 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். சச்சின் 25 டெஸ்ட் போட்டிகளில் 1741 ரன்கள் குவித்துள்ளார். இதையடுத்து, சச்சினுக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி தனது பெயரை படைத்துள்ளார். 


அஸ்வினும் சரித்திரம் படைக்க வாய்ப்பு:


உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் ஒரு தனித்துவமான சாதனையை படைக்க இருக்கிறார். ரவிசந்திரன் அஸ்வின் இதுவரை 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 489 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 34 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அப்படிப்பட்ட நிலையில், 500 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை படைக்க ரவிசந்திரன் அஸ்வினுக்கு இன்னும் 11 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது.


தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் இதை செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே. கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 10/74 ஆகும். ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் கும்ப்ளே. கும்ப்ளே 269 போட்டிகளில் 335 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 


ஜாகீர்கானை முந்த பும்ராவிற்கு வாய்ப்பு: 


தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் ஜாகீர் கான் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே நேரத்தில், ஜஸ்பிரித் பும்ரா இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தத் தொடரில், ஜஸ்பிரித் பும்ரா இன்னும் 5 விக்கெட்களை எடுத்தால் ஜாகீர் கானை முந்த வாய்ப்புள்ளது. இருப்பினும், தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஜாகீர் கான் நான்காவது இடத்தில் உள்ளார்.


தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார். அனில் கும்ப்ளே 12 போட்டிகளில் 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதைய தொடர்ந்து, ஜவகல் ஸ்ரீநாத் 43 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க மண்ணில் முகமது ஷமி 35 விக்கெட்டுகளையும், ஜாகீன் கான் 30 விக்கெட்களையும் வீழ்த்தி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.