உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆடியது. இந்த தொடர்களில் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான கேப்டன் ரோகித்சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி விளையாடாமல் ஓய்வில் இருந்தனர்.
பதில் கிடைக்கும்:
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த தொடர் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு ரோகித்சர்மா மற்றும் விராட் கோலி திரும்பியுள்ளனர். இந்த நிலையில், இந்த தொடருக்கு முன்பு இந்திய கேப்டன் ரோகித்சர்மா இன்று தென்னாப்பிரிக்காவில் நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது, அவரிடம் டி20 உலகக்கோப்பையை வெல்லவில்லை என்ற விரக்தி உங்களுக்கு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் ஆடுவீர்களா? என்பதே அந்த கேள்வி ஆகும். அதைப்புரிந்து கொண்ட கேப்டன் ரோகித்சர்மா, “எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை வைத்து வெற்றி பெற முயற்சிப்போம். உங்களுக்கு என்ன பதில் வேண்டும் என்பது எனக்குத் தெரியும். கண்டிப்பாக உங்களுக்கு விரைவில் அது கிடைக்கும்.” என்றார்.
மறைமுகமாக சொல்வது என்ன?
விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரோகித்சர்மா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், டி20 உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஒருநாள் தொடர்களுக்கு கேப்டனாக பொறுப்பு வகித்தார். ஆனால், எந்த தொடரையும் இந்திய அணி வெல்லாதது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், 5 முறை சாம்பியன் பட்டத்தை மும்பை அணிக்காக பெற்றுக்கொடுத்த ரோகித்சர்மாவின் கேப்டன்சியை மும்பை அணி பறித்தது மிகப்பெரிய அதிர்ச்சியை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு பிறகு எந்த ஒரு டி20 போட்டியிலும் விராட்கோலியும், ரோகித்சர்மாவும் ஆடவில்லை. இதனால், அடுத்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை ரோகித்சர்மா வழிநடத்துவாரா? ஆடுவாரா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. இந்த சூழலில்தான் ரோகித்சர்மா உங்கள் கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்திற்கு ஒரே தேதியில் முற்றுப்புள்ளி வைத்த இந்திய ஆண்கள் - மகளிர் அணி
மேலும் படிக்க: Boxing Day Test: பாக்சிங் டே டெஸ்ட் உருவானது எப்படி..? அதன் வரலாறு என்ன? அதில் இந்திய அணியின் செயல்பாடு என்ன..?