தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. 


இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது. உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, மீண்டும் இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார் ரோஹித் சர்மா. இந்த போட்டியில் வெற்றிபெற்று 2023ம் ஆண்டை மகிழ்ச்சியுடன் முடிக்க இந்திய அணி விரும்புகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 


தொடரை வெல்லுமா இந்திய அணி:


இந்த டெஸ்ட் தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனென்றால் இன்றுவரை இந்திய அணியால் தொடரை வெல்ல முடியாத ஒரே நாடு தென்னாப்பிரிக்கா. தொடரை வெல்வது ஒருபுறம் இருக்க, தென்னாப்பிரிக்காவில் இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா வெற்றிபெறுவது மிகவும் கடினமாக உள்ளது. தென்னாப்பிரிக்க மண்ணில் மொத்தம் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, அதில் 4 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 


1992ம் ஆண்டு இந்திய அணி முதல் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுபயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. அன்றிலிருந்து 2022 வரை தென்னாப்பிரிக்காவில் இரு நாடுகளுக்கும் இடையே 8 முறை டெஸ்ட் தொடர்கள் நடந்துள்ளன. இந்திய அணி இதுவரை இங்கு எந்த தொடரையும் வென்றதில்லை. 2010-11 சுற்றுப்பயணத்தின் போது, ​​இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.


இம்முறை தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை விட சற்று பலவீனமாக இருப்பதால், இவ்வாறான சூழ்நிலையில் இந்தியா தொடரை கைப்பற்றும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த தொடரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும். எனவே, இரு அணிகளும் அதிகபட்ச புள்ளிகளை பெற விரும்புகின்றன. 


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஒட்டுமொத்த சாதனை (நேருக்குநேர்)
மொத்த டெஸ்ட் போட்டிகள்: 42, இந்தியா வெற்றி: 15, தென்னாப்பிரிக்கா வெற்றி: 17, டிரா - 10 


இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் சாதனை (தென்னாப்பிரிக்காவில் போட்டிகள் நடந்தபோது)
மொத்த டெஸ்ட்: 23, தென்னாப்பிரிக்கா வெற்றி: 12, இந்தியா வெற்றி: 4, டிரா  - 7


போட்டியை எங்கு? எப்படி காணலாம்..?


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸின் அனைத்து சேனல்களிலும் கண்டு களிக்கலாம். மேலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆஃப்களில் நேரடியாக காணலாம். 






கணிக்கப்பட்ட இந்திய அணி விவரம்:


ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி: 


ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஸ்ரீகர் பாரத், முகேஷ் குமார், அபிமன்யு ஈஸ்வரன்