உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியா பாகிஸ்தான் போட்டி இன்று அதாவது அக்டோபர் 14ஆம் தேதி மோதிக் கொண்டது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் இந்தியா அணி தரப்பில் இஷான் கிஷன் வெளியேற்றப்பட்டு சுப்மன் கில் சேர்க்கப்பட்டார். 


டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பந்து வீச முடிவு செய்தார். அதன் படி பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸை அப்துல்லா மற்றும் இமாம் உல்-ஹக் தொடங்கினர். இருவரும் தொடக்கத்தில் இந்திய அணிக்கு சவால் அளிக்கும் ஆட்டத்தினை ஆடினர். குறிப்பாக பவர்ப்ளேவை சரியாக பயன்படுத்தி பவுண்டரிகள் விரட்டி வந்தர். இவர்களின் கூட்டணியை பிரிப்பது இந்திய அணிக்கு சவால் அளிக்கும் விதமாக இருந்தது. போட்டியின் 8வது ஓவரின் கடைசி பந்தில் முகமது சிராஜிடம் அப்துல்லா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் கைப்பற்றும் பும்ராவால் இம்முறை விக்கெட் வீழ்த்த முடியவில்லை. 


அதன் பின்னர் வந்த பாபர் அஸாமுடன் இமாம் உல்-ஹக் சிறப்பாக விளையாடிவர, ஒரு கட்டத்தில் அவரும் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த ரிஸ்வான் பாபர் அஸாமுடன் இணைந்து பாகிஸ்தான் அணியின் ரன்ரேட்டினை சிறப்பாக உயர்த்தி வந்தனர். இவர்கள் இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சினை சராமாரியாக பவுண்டரிக்கு விரட்டி வந்தனர். இவர்களின் கூட்டணி நிலைத்தால் பாகிஸ்தான் அணி 300 ரன்களைக் கடக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். 


ஆனால் இவர்களின் கூட்டணியை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் உடைக்க, அதன் பின்னர் பாகிஸ்தான் அணி தரப்பில் நிலையான பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை. போட்டியின் 34வது மற்றும் 36வது ஓவரினை வீசிய பும்ரா அந்த ஓவரில் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேனான ரிஸ்வான் மற்றும் ஷகிப் கான் ஆகியோரை க்ளீன் போல்ட் ஆக்கி வெளியேற்றினார். 


இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் தாக்கு பிடிப்பதே சிரமம் என்ற நிலை உருவாகியது. போட்ட்யின் 40வது ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் சேர்த்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்கள் முடிவில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் சேர்த்தது. 


சிறப்பாக விளையாடி வந்த பாகிஸ்தான் அணி தனது 3வது விக்கெட்டினை 155 ரன்களில் இருந்தபோது இழந்தது. அதன் பின்னர் பாகிஸ்தான் அணி தனது 7 விக்கெட்டுகளை அடுத்த 36 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. இந்திய அணி சார்பில் பந்து வீசிய பும்ரா, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.