காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று மோதின. இந்த போட்டி மழை காரணமாக 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.




டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்து இந்தியாவிற்கு 100 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டத்தை ஷபாலி வர்மாவும், ஸ்மிரிதி மந்தனாவும் தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய உடனே ஷபாலி வர்மா அதிரடியாக ஆடினார். பவுண்டரி, சிக்ஸர் என விளாசிய அவர் 9 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸர் என 9 பந்துகளில் 16 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு மேகனா களமிறங்கினார்.






தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசினார். இதனால், இந்திய அணியின் ரன் வேகம் ஜெட் வேகத்ததல் எகிறியது. மந்தனாவை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் வீராங்கனைகள் தடுமாறினர்.


இந்திய அணி வெற்றியை நெருங்கியபோது மேகனா 2 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 11.4 ஓவர்களிலே 102 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக அதிரடியாக பேட் செய்த ஸ்மிரிதி மந்தனா 42 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.




முன்னதாக, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனை முனிபா மட்டும் 32 ரன்கள் விளாசினார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி சிறப்பான தொடக்கம் கண்டும் 18 ஓவர்களில் 99 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. கடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் போராடி தோல்வியடைந்த இந்திய அணி இந்த போட்டியில் அதிரடியாக வெற்றி பெற்றது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண