நடப்பாண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் 2022 இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. போட்டிகள் தொடங்கி இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில், இந்திய அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். மூன்றாவது நாளான இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
காமன்வெல்த் கிரிக்கெட் வரலாறு :
1998 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தான் கிரிக்கெட் முதன்முதலில் இடம்பெற்றது. இதில் தற்போது மகளிருக்கான கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. மகளிருக்கான காமன்வெல்த் கிரிக்கெட் போட்டி டி20 ஃபார்மேட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றனர். இந்த 8 அணிகளும் க்ரூப் A மற்றும் க்ரூப் B என இரண்டு குழுக்களாக பிரிந்து மோத உள்ளது. அதில் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பார்படோஸ் ஆகியவை க்ரூப் A விலும் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் க்ரூப் B-இலும் இடம்பெற்றுள்ளன.இதற்கு முன் பங்கேற்ற போட்டியில், இந்திய அணி உலக சேம்பியனான ஆஸ்திரேலிய அணியிடம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இன்று மோதும் இந்தியா பாகிஸ்தான்!
வழக்கமாக, இந்தியா பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியை, வெறும் போட்டியாக இல்லாமல் ரசிகர்கள் பெரும் போராக பார்ப்பார்கள். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ள, இந்த போட்டிக்கான டாஸ் பிற்பகல் 3 மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்த போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் இன்று நடைபெற உள்ள போட்டியில் தங்களது முதல் வெற்றி வாகையை சூட எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
லைவ் ஸ்ட்ரீமிங்:
இந்த போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் லைவ் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும் சோனி லைவ் செயலி மற்றும் வெப்சைட்டில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியை காண வீரர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும், ரசிகர்களும் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
காமன்வெல்த் போட்டிகளில் இந்த ஆண்டு மகளிருக்கான கிரிக்கெட் போட்டியை அறிவித்து பெரும் வரவேற்பை பெற்றது காமன்வெல்த். இந்நிலையில் வரும் நாட்களில் மகளிருக்கான கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக்கிலும் இடம்பெற இது ஒரு நல்ல முன்னெடுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்