இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி என்பது அடிக்கடி நடைபெறுவதில்லை. அது இந்தியாவின் பிரதமர்  மோடி நினைத்தால் முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார். 


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி. இவர் அந்த அணிக்காக சிறப்பாக விளையாடிய வீரர்களில் மிகவும் முக்கியமான ஒருவர். களத்தில் அப்ரிடி நின்றாலே எதிரணியினர் அவருக்கு என தனி வியூகம் வகுக்க வேண்டும் எனும் அளவிற்கு மிகவும் பலமான ஆல்-ரவுண்டர் எனலாம். இவ்வளவு பலமான கிரிக்கெட் வீரர் தற்போது மிகவும் முக்கியமான கருத்து ஒன்றினைக் கூறியுள்ளார்.  அது, கிரிக்கெட் உலகில் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் அதற்கென தனி கவனமும் வரவேற்பும் உள்ளது. அப்படி இருக்கும் போது அரசியல் காரணங்களால் இரு அணிகளுக்கு இடையில் ஐசிசி போட்டிகளைத் தவிர வேறு போட்டிகள் நடைபெறுவதில்லை. அதனால், இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் நடக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். 


தோஹாவில் நடைபெறும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இரு நாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் நடக்க அனுமதிக்குமாறு மோடி சாஹாப்பை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று  கூறினார். மேலும், ”இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் மோதின, அடுத்ததாக இந்த ஆண்டு ஆசிய கோப்பையில் நேருக்கு நேர் மோதிக்கொள்ள  திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், போட்டியின் அட்டவணைப் படி மைதானப் பிரச்சினைகளில் உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்கப்படாது, மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டியை அதன் சொந்த நாட்டில் நடத்துவதில் குறியாக உள்ளது” என்றார்.


இதுகுறித்து பேசிய அப்ரிடி, பிசிசிஐ மிகவும் வலுவான கிரிக்கெட் வாரியமாக உள்ளது, ஆனால் அது 'எதிரிகளை' உருவாக்க முயற்சிக்கக்கூடாது, மாறாக 'நண்பர்களை' உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.


"நாம் ஒருவருடன் நட்பு கொள்ள விரும்பினால், அவர் நம்முடன் பேசவில்லை என்றால், நாம் என்ன செய்ய முடியும்? பிசிசிஐ மிகவும் வலுவான வாரியம் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நீங்கள் வலுவாக இருக்கும்போது, ​​​​உங்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது. நீங்கள் எதிரிகளை உருவாக்க முயற்சிக்காதீர்கள். நீங்கள் அதிக நண்பர்களை உருவாக்க வேண்டும், நீங்கள் அதிக நண்பர்களை உருவாக்கினால், நீங்கள் இன்னும் பலமாகிவிடுவீர்கள்," என்று அப்ரிடி கூறினார்.


பிசிபி (PCB Pakistan Cricket Board) ஒரு 'பலவீனமான கிரிக்கெட் போர்டு' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அப்ரிடி அப்படி நினைக்கவில்லை என்று கூறினார்.



இந்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய வீரர்களுடனான தனது உறவு குறித்தும் பேசினார். ​சமீபத்தில் முடிவடைந்த லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் ஒரு பேட் பெற்றதாக கூறினார். நான் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் போது ரெய்னாவை சந்தித்தேன், நான் ஒரு பேட் கேட்டேன், அவர் எனக்கு ஒரு பேட் பரிசாக கொடுத்தார்," என்று அவர் கூறினார்.