உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்தியா  - ஆஸ்திரேலிய அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


இந்த நிலையில், நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சிறந்த லெவனை அதாவது 11 பேர் கொண்ட சிறந்த அணியை புகழ்பெற்ற விஸ்டன் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் 3 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். ரிஷப்பண்ட், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகிய 3 பேர் மட்டுமே இந்தியாவின் சார்பில் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


விஸ்டனின் சிறந்த 11 பேர் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியை கீழே காணலாம்.



  • உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா)

  • திமுத் கருணரத்னே(இலங்கை)

  • லபுசேனே (ஆஸ்திரேலியா)

  • தினேஷ் சண்டிமால் (இலங்கை)

  • ஜானி பார்ஸ்டோ ( இங்கிலாந்து)

  • ரிஷப்பண்ட் ( இந்தியா – விக்கெட் கீப்பர்)

  • ரவீந்திர ஜடேஜா ( இந்தியா)

  • பாட் கம்மின்ஸ் ( ஆஸ்திரேலியா)

  • ரபாடா ( தென்னாப்பிரிக்கா)

  • நாதன் லயன் (ஆஸ்திரேலியா)

  • பும்ரா ( இந்தியா)


 


கவாஜா:


 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் கவாஜா 2வது இடம்பிடித்துள்ளார். 16 போட்டிகளில் அவர் 1608 ரன்கள் குவித்துள்ளார். அதில் 6 சதங்கள், 7 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 195 ரன்கள் எடுத்துள்ளார்.


கருணரத்னே:


இலங்கை அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் கருணரத்னே. நடப்பு உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் தொடரில் 12 போட்டியில் 2 சதம், 8 அரைசதங்களுடன் 1054 ரன்கள் எடுத்துள்ளார்.


லபுசேனே:


நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருப்பவர். இவர் 19 போட்டிகளில் ஆடி 1509 ரன்கள் குவித்துள்ளார். அதில் 5 சதங்களும், 5 அரைசதங்களும் அடங்கும்.


சண்டிமால்:


இலங்கையின் முன்னாள் கேப்டன் சண்டிமால் 10 போட்டிகளில் ஆடி 2 சதங்கள், 5 அரைசதங்களுடன் 958 ரன்கள் எடுத்துள்ளார். பாபர் அசாம், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகியோரை வீழ்த்தி சண்டிமால் 4வது இடத்தை பிடித்துள்ளார்.


பார்ஸ்டோ:


ஜானி பார்ஸ்டோ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடியுள்ளார். 15 போட்டிகளில் ஆடி 6 சதங்கள், 2 அரைசதங்களுடன் 1285 ரன்கள் எடுத்துள்ளார்.


ரிஷப்பண்ட்:


நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விக்கெட் கீப்பர்களிலே அதிக ரன்கள் எடுத்தவராக ரிஷப்பண்ட் உள்ளார். அவர் 12 போட்டிகளில் ஆடி 2 சதங்கள், 5 அரைசதங்களுடன் 868 ரன்கள் எடுத்துள்ளார்.


ஜடேஜா:


நடப்பு  சாம்பியன்ஷிப் தொடரில் 500 ரன்களுக்கு மேலாகவும், 40 விக்கெட்டுகளுக்கு மேலேயும் கைப்பற்றிய ஒரே வீரர் ஜடேஜா மட்டுமே. 12 போட்டிகளில் ஆடி 2 சதங்கள், 3 அரைசதங்கள் உள்பட 673 ரன்களையும், 43 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.


பாட் கம்மின்ஸ்:


நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய 5வது வீரர் பாட் கம்மின்ஸ். அவர் 15 போட்டிகளில் ஆடி 53 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். வெளிநாடுகளில் மட்டும் 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 3 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


ரபாடா:


தென்னாப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ரபாடா 13 போட்டிகளில் ஆடி 67 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒவ்வொரு இன்னிங்சிற்கும் சராசரியாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


நாதன் லயன்:


நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலே அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர் நாதன் லயன். இவர் 19 போட்டிகளில் ஆடி 83 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலிய வெளிநாட்டில் வென்ற 3 டெஸ்ட் போட்டிகளில் லயன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


பும்ரா:


கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் ஆடாவிட்டாலும் பும்ரா நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 10 போட்டிகளில் ஆடி 45 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் 3 முறை 5 விக்கெட்டுகள் அடங்கும்.