நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் இன்று நடைபெற்று வரும் 2வது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் போட்டி தற்போது தொடங்கியுள்ளது. மழையால் ஆட்டம் சுமார் 4 மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த போட்டி 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டுள்ளதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர்.
இதன்படி, 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே உணவு இடைவேளை அளிக்கப்படும். குடிநீர் இடைவேளை ஏதும் அளிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய அணி 4.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மைதானம் முழுவதும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டது. சுமார் 1 மணிநேரத்திற்கும் மழை விளாசியதால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. தேங்கிய நீரை மைதான பராமரிப்பு பணியாளர்கள் அகற்றினர். ஏற்கனவே அவுட்ஃபீல்ட் ஈரமாக இருந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது.
தற்போது, ஆட்டம் 29 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்திய அணி அதிரடியாக ஆட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணி ஏற்கனவே 5 ஓவர்கள் மட்டுமே ஆடி விட்டதால், எஞ்சிய 24 ஓவர்கள் அதிரடியாக ஆட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியில் கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய சுப்மன்கில், ஷிகர்தவான், ஸ்ரேயாஸ் அய்யர் இன்று அதிரடியாக ஆட வேண்டியது அவசியம்.
இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கும் ரிஷப்பண்ட் இன்று அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மழை பெய்த காரணத்தால் பந்துவீச்சின் தாக்கம் மைதானத்தில் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. மேலும், நியூசிலாந்து வீரர்களும் இலக்கை நோக்கி அதிரடியாக ஆடுவார்கள் என்பதால் இந்திய அணி இமாலய இலக்கை குவிக்க முயற்சிப்பார்கள். இந்த போட்டியில் மழை மீண்டும் குறுக்கிடாவிட்டால் இந்த போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.