சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். தொடரில் ஜாம்பவான் அணியாக வலம் வந்ததற்கு முக்கிய காரணம் யார் என்று ரசிகர்களிடம் கேட்டால், ரசிகர்கள் சொல்லும் இரண்டு பேர் தோனி மற்றும் ரெய்னாதான். தோனியை தல என்றும், சுரேஷ் ரெய்னாவை சின்ன தல என்றும் அன்புடன் அழைப்பதன் மூலமாகவே நாம் சி.எஸ்.கே.விற்கு அவர்களின் பங்களிப்பை அறிந்து கொள்ளலாம்.


13 வயதில் நிகழ்ந்த கொடூரம்:


இந்திய அணிக்காகவும் நெருக்கடியான பல சமயங்களில் கைகொடுத்து காப்பாற்றிய சுரேஷ் ரெய்னாவிற்கு இன்று 36வது பிறந்தநாள். இதையடுத்து, சமூக வலைதளங்களில் சின்ன தல சுரேஷ் ரெய்னாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நெருக்கடியான நேரங்களில் ஆபத்பாந்தவனாக இந்திய அணிக்கும், சென்னை அணிக்கும் கை கொடுத்து காப்பாற்றிய சுரேஷ் ரெய்னாவைதான் நாம் அறிந்திருப்போம்.




ஆனால், நெருக்கடிகளையும், கடினமான சூழல்களையும் சந்தித்து தற்கொலை செய்து கொண்டு விடலாம் என்ற எண்ணத்தை எதிர்கொண்ட சுரேஷ் ரெய்னாவை நாம் சந்தித்திருக்க மாட்டோம். சுரேஷ் ரெய்னா தன்னுடைய 13 வயதில் சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதற்காக ஆக்ரா நோக்கிச் சென்று கொண்டிருந்தார். ரயிலில் தரையில் செய்தித்தாளை விரித்து அதன் மேல் படுத்து தூங்கியுள்ளார். இரவு நேரம் என்பதால் அதிகளவு குளிர் வீசும் என்பதால் கிரிக்கெட் ஆடும்போது அணிந்துகொள்ளும் பேட்( தடுப்பு அட்டை) உடலில் அணிந்து கொண்டே தூங்கிக் கொண்டிருந்தார்.


முகத்தில் சிறுநீர் அடித்த அவலம்:


அப்போது, தன் மீது அதிகளவு பாரம் இருப்பதை சுரேஷ் ரெய்னா உணர்ந்தார். இதனால், கண் விழித்து பார்த்த சுரேஷ் ரெய்னாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது, சுரேஷ் ரெய்னாவை விட வயதில் மூத்த இன்னொரு சிறுவன் சுரேஷ் ரெய்னாவின் நெஞ்சின் மீது ஏறி அமர்ந்திருந்தான். அவனை கீழே தள்ளிவிட முயற்சித்தபோதுதான் தன்னுடைய கைகள் கட்டப்பட்டிருப்பதை ரெய்னா உணர்ந்தார். அந்த சிறுவனிடம் இருந்து தப்பிக்க ரெய்னா முயற்சித்துக் கொண்டிருந்தபோதே, அந்த சிறுவன் திடீரென ரெய்னாவின் முகத்தில் சிறுநீர் கழித்துள்ளான். இதனால், பேரதிர்ச்சி அடைந்த ரெய்னா தனது கைகள் கட்டப்பட்டிருந்த நிலையிலும், சட்டென்று அவனை கீழே தள்ளிவிட்டு அவனிடம் இருந்து தப்பினார்.




உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ விளையாட்டு பல்கலைக்கழகத்தில் சுரேஷ் ரெய்னா தங்கியிருந்தபோது பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளார். அங்கு அவர் தங்கி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது, சக விளையாட்டு வீரர் ஒருவர் சுரேஷ் ரெய்னாவை ஹாக்கி மட்டையால் பலமாக தாக்கியுள்ளார். இதில், சுரேஷ் ரெய்னா படுகாயமடைந்து சுய நினைவு இல்லாத நிலைக்கு ஆளாகியுள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக சுரேஷ் ரெய்னாவிற்கு ஏதும் நிகழவில்லை.


தற்கொலை எண்ணம்:


லக்னோ விளையாட்டு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து சந்தித்து வந்த மன உளைச்சல்கள், சிரமங்களால் சுரேஷ் ரெய்னா ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டாராம். ஆனால், விளை்யாட்டு வீரனுக்கு அது அழகல்ல என்று அந்த எண்ணத்தை நல்ல வேளையாக தவிர்த்துவிட்டார். ஆனாலும், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ரெய்னா அங்கிருந்து பாதியிலே வெளியேறிவிட்டார். பின்னர், ரெய்னா சகோதரர் அளித்த அறிவுறுத்தலின்படி மீண்டும் லக்னோ விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு ரெய்னா திரும்பி வந்தார்.




சின்ன தல:


தன்னுடைய பதின்ம வயதில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட சுரேஷ் ரெய்னா முதன்முறையாக 2005ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். அன்று தொடங்கி 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 சதம், 36 அரைசதங்களுடன் 5 ஆயிரத்து 615 ரன்களும், 78 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம், 5 அரைசதம் உள்பட 1604 ரன்களை விளாசியுள்ளார். 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 சதம் 7 அரைசதங்களுடன் 768 ரன்களும் எடுத்துள்ளார்.


ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை அணிக்காக ஒரு சகாப்தமாகவே விளங்கி, ரசிகர்களால் சின்ன தல என்று அன்புடன் அழைக்கப்படும் அளவிற்கு உயர்ந்த ரெய்னா 205 ஆட்டங்களில் ஆடி 1 சதம், 39 அரைசதங்களுடன் 5 ஆயிரத்து 528 ரன்களை விளாசியுள்ளார். இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் முதன் முறையாக சதம் விளாசிய இந்தியர் என்ற பெருமையும் சுரேஷ் ரெய்னா வசமே உள்ளது.


பல்வேறு தடைகளை படிப்படியாக கடந்து ரசிகர்களின் நெஞ்சில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் சுரேஷ் ரெய்னாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.