உலககோப்பையில் குரூப் 2 பிரிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் தங்களது வாழ்வா? சாவா? ஆட்டத்தில் துபாய் மைதானத்தில் இன்று மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பீல்டிங் செய்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், புவனேஷ்குமாருக்கு பதிலாக இஷான்கிஷானும், ஷர்துல் தாக்கூரும் களமிறங்கினர். புதிய முயற்சியாக வகையில் இஷான்கிஷானும், கே.எல்.ராகுலும் ஆட்டத்தை தொடங்கினர்.
அதிரடியாக ஆட முயற்சித்த இஷான்கிஷான் மூன்றாவது ஓவரில் ட்ரென்ட் போல்ட் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்-டவுனில் களமிறங்கிய ரோகித்சர்மாவும், கே.எல்.ராகுலும் அதிரடியாக ஆடி ரன்ரேட்டை உயர்த்தினர். ஆனால், கே.எல்.ராகுலும் சவுதி பந்தில் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, விராட்கோலியும், ரோகித் சர்மாவும் நிதானமாக ஆடினர். ஆனால், ரோகித் சர்மா 14 ரன்களிலும், விராட்கோலி 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 48 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி தடுமாறியது.
அடுத்து ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டயாவும், ரிஷப் பண்டும் மிகவும் நிதானமாகவே ஆடினர். ரிஷப்பண்ட் 12 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார். 15 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் மட்டுமே எடுத்தது. 5.1 ஓவர்களுக்கு பிறகு 73 பந்துகளாக பவுண்டரியே அடிக்காத இந்திய அணி 17வது கடைசி ஓவரில்தான் பவுண்டரி அடித்தது.
நீண்டநேரமாக நிதானமாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்திய அணி 19.1 ஓவர்களில்தான் 100வது ரன்னையே அடித்தது. கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜா சிக்ஸர் உதவியுடன் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 19 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்தார். போல்ட் 3 விக்கெட்டுகளையும், சோதி 2 விக்கெட்டுகளையும், மிலென் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கப்தில் அதிரடியாக ஆடினர். அவர் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தபோது பும்ரா பந்தில் 17 பந்தில் 3 பவுண்டரியுடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வில்லியம்சன் நிதானமாக ஆட, டேரில் மிட்செல் அதிரடியாகவே ஆடினார்.
டேரில் மிட்செல் ஜடேஜா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் என யார் வீசினாலும் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டினார். இருவரது பார்ட்னர்ஷிப்பும் 35 பந்தில் 50 ரன்களை கடந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய டேரில் மிட்செல் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் 34 பந்தில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனாலும், அவரது விக்கெட் இழப்பால் நியூசிலாந்தின் வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
13.4 ஓவர்களில் நியூசிலாந்து 100 ரன்களை கடந்தது. கடைசியில் இந்திய அணி நிர்ணயித்த 111 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில்லியம்சன் 33 ரன்களுடனும், கான்வே 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பும்ரா மட்டும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா 2 ஓவர்களில் 23 ரன்களையும், ஷர்துல் தாக்கூர் 1.3 ஓவர்களில் 17 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் டி20 உலககோப்பை கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியதே கிடையாது என்ற சோகமான வரலாறு தொடர்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்