இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் ஆடி வரும் நியூசிலாந்து அணி டி20 தொடரை இழந்த நிலையில், டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திராவின் நிதானமான மற்றும் பொறுப்பான பேட்டிங்கால் கடைசி விக்கெட்டை இழக்காமல் ஆடி போட்டியை போராடி டிரா செய்தது.
இந்த நிலையில், இந்த தொடரின் கடைசி போட்டியான இந்தியா- நியூசிலாந்து மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மும்பையில் தொடங்க உள்ளது. நியூசிலாந்து அணியில் கடந்த டெஸ்ட் மூலம் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் அணிக்கு திரும்பினார். நாளை தொடங்க உள்ள டெஸ்ட் போட்டி மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அணிக்கு திரும்ப உள்ளார். இதன்மூலம் இந்திய அணி மேலும் உற்சாகம் அடைந்துள்ளது.
கடந்த போட்டியில் போராடி தோல்வியை தவிர்த்த நியூசிலாந்து அணி, கடந்த போட்டியில் செய்த தவறுகளை இந்த போட்டியில் கண்டிப்பாக திருத்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் பேட்டிங்கிற்கு தூணாக தொடக்க வீரர்கள் டாம் லாதமும், வில் யங்கும் மட்டுமே உள்ளனர். குறிப்பாக, டாம் லாதம் கடந்த போட்டியின் இரு இன்னிங்சிலும் அரைசதம் அடித்து அசத்தினார். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனின் பேட்டிங் இரு இன்னிங்சிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேபோல. முன்னணி வீரரான ராஸ் டெய்லரும் பெரிதாக சோபிக்கவில்லை. ஹென்றி நிகோலஸ் உள்ளிட்ட பிற வீரர்களும் பெரியளவில் ரன்கள் சேர்க்கவில்லை, நியூசிலாந்தின் பந்துவீச்சில் டிம் சவுதியே அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளார். ஜேமிசனும் வேகத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த அணி நிர்வாகம் விரும்புகிறது. சுழற்பந்து வீச்சில் அஜாஸ் படேல் சிறப்பாக வீசி வருகிறார்.
இந்திய அணியில் நாளை விராட்கோலி மீண்டும் கேப்டனாக களமிறங்க உள்ளதால், கடந்த போட்டியில் களமிறங்கிய முக்கிய வீரர்களில் ஒருவர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால், கடந்த போட்டியில் சதம், அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ், புஜாரா, ரஹானே யாராவது ஒருவர் அவர்களது இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவர்களில் மயங்க் அகர்வால் வெளியேற்றப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அணியில் சுப்மன் கில்லும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த போட்டியின் இரு இன்னிங்சிலும் சதம், அரைசதம் அடித்து அசத்தினார். அவர் மட்டுமே கடந்த போட்டியில் சிறப்பாக பேட் செய்தார். புஜாரா, ரஹானேவின் பேட்டிங் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
வேகப்பந்துவீச்சைக் காட்டிலும் அஸ்வின், அக்ஷர் படேல், ஜடேஜா சுழலில் அசத்தி வருகின்றனர். அஸ்வினும், ஜடேஜாவும் பேட்டிங்கில் ஜொலிப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். போட்டி நாளை நடைபெற உள்ள மும்பை வான்கடே மைதானம் எப்போதுமே இந்தியாவிற்கு ராசியான மைதானம் என்பதால், இந்த போட்டியில் இந்தியா வென்று நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்