ஒவ்வொரு விளையாட்டும் சில நாடுகளில் பிரபலம் அடைவதற்கு நம்பவே முடியாத அளவிற்கு சில நிகழ்வுகள் நடைபெற்றால் மட்டும்தான் அது சாத்தியமாகும். இன்றைய சூழலில், இந்திய கிரிக்கெட் அணி எப்பேற்பட்ட சாம்பியன் அணி வந்தாலும் அதை வீழ்த்தும் வல்லமை கொண்ட அணியாக ஜாம்பவனாக உள்ளது. இதனால், இந்தியாவின் திறமைக்கு இரண்டு உலககோப்பைகள் மட்டுமே பெற்றுள்ளது என்பது மிகவும் குறைவாக இருக்கலாம்.
ஆனால், இன்றிலிருந்து சுமார் 38 ஆண்டுகள் முன்னோக்கி, அதாவது 1983ம் ஆண்டில் இருந்து இந்திய அணியை பார்த்தால் “இது தேறாது… அது அவ்ளோதான்.. கதை முடிஞ்சது” என்று சொல்வார்களே அதுபோன்றுதான் இருந்தது. ஆனால், அந்த முடிந்த கதையை சகாப்தமாக மாற்றிய எழுதியவர்தான் கபில்தேவ். இதனால்தான் இந்திய கிரிக்கெட் வரலாற்றை கபில்தேவிற்கு முன், கபில்தேவிற்கு பின் என்றே பிரிக்கலாம். அப்பேற்பட்ட சாதனை வீரனான கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் விதமாக ரன்வீர்சிங் நடிப்பில் உருவாகியுள்ள “83” படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியது.
அந்த டிரெய்லரில் இந்தியாவின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்து கொண்டிருக்க, குளித்துக்கொண்டிருக்கும் ரன்வீர்சிங்கை (கபில்தேவை) இந்திய வீரர்கள் அவசர, அவசரமாக அழைப்பார்கள். இந்த காட்சி படத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல. இந்தியாவின் கிரிக்கெட் சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்காக உண்மையில் நிகழ்ந்த தருணம் ஆகும்.
ஆம். 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இங்கிலாந்துக்கு உலககோப்பை விளையாட சென்ற இந்திய அணி ஒரு நெருக்கடியான ஆட்டத்தில், வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் ஜிம்பாப்வேயை சந்தித்தது. அப்போது, 60 ஓவர்களாக கொண்ட போட்டியாக நடைபெற்ற அந்த தொடரின் முக்கியமான அந்த போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது.
83ம் ஆண்டு ஜூன் 18-ந் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்ததால், கேப்டன் கபில்தேவ் குளித்துவிட்டு வரலாம் என்று டிரெஸ்ஸிங் ரூமில் உள்ள குளியலறைக்கு சென்றார். அவர் குளித்துக்கொண்டிருக்கும் போது அவரது குளியலறையின் கதவு தட்டப்பட்டது. திறந்த பார்த்த கபில்தேவிற்கு இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தும் அப்படியே உட்கார்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அருகில் மொகிந்தர் அமர்நாத்தும் இருந்தார். என்னவென்ற கேட்ட கபில்தேவிடம் 4 விக்கெட்டுகள் விழுந்துவிட்டதாக அணியின் மேனேஜர் ஆர்.பி.மன்சிங் கூறினார். இந்தியா 17 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் விழுந்துவிட்டது.
இந்தியாவின் வெற்றி பறிபோயிவிட்டதாகதான் கிட்டத்தட்ட மைதானத்தில் இருந்த அனைவருமே நினைத்தனர். திரைப்படங்களில் காட்டுவார்களே எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும் நேரத்தில் கதாநாயகன் சூப்பர் ஹீரோ போல வெற்றி பெறுவார். அன்று திரைப்படங்களில் மட்டுமே பார்க்கப்பட்ட அதிசயம் மைதானத்தில் குழுமியிருந்தவர்களுக்கு கிடைத்தது.
6வது விக்கெட்டாக களமிறங்கிய கேப்டன் கபில்தேவ் ஆடிய ஆட்டம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதவை. ரோஜர் பின்னியை மறுமுனையில் துணைக்கு வைத்துக்கொண்டு தனி ஆளாக பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் பறக்கவிட்டார். ஆனால், மறுமுனையில் ரோஜர் பின்னி 22 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா 77 ரன்களுக்கு 6வது விக்கெட்டைபறிகொடுத்தது. அடுத்து இறங்கிய ரவிசாஸ்திரி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால், மீண்டும் இந்தியா நெருக்கடிக்கு உள்ளானது. கபில்தேவிற்கு சற்றுநேரம் ஒத்துழைப்பு அளித்த வேகப்பந்து வீச்சாளர் மதன்லாலும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
140 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்தியாவின் ஒட்டுமொத்த ஆட்டத்தை, அதற்கு பிறகு கபில்தேவே தன்னுடைய தோளில் சுமந்துகொண்டார். மறுமுனையில் கிரிசீல் மட்டும் சையத் கிர்மானியை நிறுத்திக்கொண்டு பீட்டர் ராசன், கெவின் கரன், இயான் பட்சர்ட், டங்கன் ப்ளெட்சர், ஜான் ட்ராய்கோஸ் என்று யார் வீசினாலும் விளாசினார். கபில்தேவின் ஆட்டத்தை பார்த்த ஜிம்பாப்வே வீரர்கள், அவரைதான் அவுட்டாக்க முடியவில்லை, கிர்மானியையாவது ஆட்டமிழக்க செய்ய முயற்சித்தனர். ஆனால், அன்று கபில்தேவ் தன் ராஜாங்கத்தை யாரிடமும் கொடுக்காமல், இந்திய கிரிக்கெட்டின் சாம்ராஜ்யத்தை எழுப்பிக்கொண்டிருந்தார்.
17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்தியா இறுதியில் 60 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களை குவித்திருந்தது. இப்படி ஒரு சம்பவம் உலககோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதற்கு முன்பும் சரி, இப்போதும் சரி நடந்ததே இல்லை. ஜாம்பவான் கிரிக்கெட்டர்களான கவாஸ்கர், ஸ்ரீகாந்த் 0 ரன்களும், அமர்நாத் 5 ரன்களும், சந்தீப் பட்டீல் 1 ரன்களும், யஷ்பால் சர்மா 9 ரன்களுமே எடுத்திருந்தனர். ஆனால், கேப்டன் கபில்தேவ் மட்டும் 138 பந்துகளில் 16 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 175 ரன்களை குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த ரோஜர் பின்னி 22 ரன்களும், மதன்லால் 17 ரன்களும், சையத்கிர்மாணி 24 ரன்களும் எடுத்திருந்தனர்.
இந்தியா நிர்ணயித்த 267 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே, 57 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. கபில்தேவ் பேட்டிங் மட்டுமின்றி 11 ஓவர்கள் வீசி 32 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இன்று நவீன காலத்தில் பவர்ப்ளே, ப்ரீஹிட், ரிவியூ உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இருக்கிறது. ஆனால், இது ஏதுமே இல்லாத காலத்தில் கபில்தேவ் அசாத்தியமான ஒன்றை சாத்தியப்படுத்தினார். ஆனால், இந்தியா- ஜிம்பாப்வே ஆடிய அன்று பி.பி.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், கபில்தேவின் அசாத்திய 175 ரன்கள் வீடியோவாக படம்பிடிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது.
கபில்தேவிற்கு பிறகு இந்திய கிரிக்கெட்டிற்கு இதுவரை இவரைப்போன்ற ஒரு ஆல்ரவுண்டர் 40 ஆண்டுகளாகியும் கிடைக்கவில்லை. அதிலிருந்தே கபில்தேவ் எப்படிபட்ட வீரர் என்பதை புரிந்துகொள்ளலாம். கபில்தேவின் அசாத்திய கிரிக்கெட் ஆற்றலாலே, அவருடன் விளையாடிய ஸ்ரீகாந்த் “ கபில்தேவ் மாதிரி ஒரு கிரிக்கெட் வீரர் கிடையவே கிடையாது. அப்படி ஒருவர் பிறந்துதான் வரணும்” என்று அடிக்கடி புகழாரம் சூடுவார்.
இந்திய கிரிக்கெட்டிற்கு கங்குலி, தோனி என்று ஜாம்பவான் கேப்டன்கள் இருந்தாலும், தன்னம்பிக்கையே இல்லாத, துளியளவும் கிரிக்கெட் காதலே இல்லாத அணியை அழைத்துக்கொண்டு உலககோப்பையை வென்றவர் கபில்தேவ். அதனால்தான இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் கபில்தேவிற்கு பிறகு பிரகாசமாக ஒளிரத்தொடங்கியது.