இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. மழையின் காரணமாக பிட்ச் ஈரமாக இருந்ததால் போட்டி கொஞ்சம் தாமதப்பட்டிருந்தது.


போட்டி தாமதமான இந்த சமயத்தில் பிசிசிஐ யிடமிருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியாகியிருந்தது. அதாவது ரஹானே, இஷாந்த் சர்மா, ஜடேஜா இந்த 3 வீரர்களும் காயமடைந்திருப்பதால் மூவரும் இந்த போட்டியில் ஆடமாட்டார்கள் என அதில் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கைதான் இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இந்த போட்டிக்கு முன்பாக நேற்று இந்திய கேப்டன் விராட் கோலி பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்தார். அதில் இந்த காயங்கள் குறித்தும் காயமடைந்த வீரர்கள் குறித்தும் அவர் பேசியிருக்கவே இல்லை. ஒரு வீரருக்கு காயம் எனில் அது பெரிதாக குறிப்பிட்டு பேச வேண்டிய விஷயமில்லை. ஆனால், மூன்று வீரர்களுக்கு காயம் எனும்போது அது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதைப்பற்றி இந்திய கேப்டன் பத்திரிகையாளர் சந்திப்பில் ஏன் பேசவில்லை? என்பது கேள்வியாகியுள்ளது.






மேலும், இந்த காயங்கள் திடீரென போட்டிக்கு முன்பாக ஏற்பட்டவை இல்லை.  அந்த 3 வீரர்களுக்குமே கடந்த போட்டியின் கடைசி நாளிலேயே காயங்கள் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆக, கோலிக்கும் ஏற்கனவே இந்த காயங்கள் பற்றி தெரிந்திருக்கும். ஆனாலும் அவர் அதுபற்றி வாயே திறக்கவில்லை.


இது எதோ யதேர்ச்சையாக நடந்த விஷயம் போல தெரியவில்லை. கோலி சமீபகாலமாகவே ஒரு வீரரை ப்ளேயிங் லெவனிலிருந்து வெளியேற்ற வேண்டுமெனில் உண்மையான காரணத்தை வெளிப்படையாக கூறாமல், அந்த வீரருக்கு சிறிய காயம் அதனால் ஓய்வளித்திருக்கிறோம் என சாக்குபோக்கான காரணத்தை கூறி நழுவுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.


கடந்த ஐ.பி.எல் தொடரிலும் இதையேத்தான் செய்திருந்தார். உலகக்கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது டாஸில் 'சூரியகுமாருக்கு சிறிய காயம். அதனால் அவருக்கு பதில் இஷன் கிஷன் ஆடுவார்' என அறிவித்துவிட்டார். ஆனால் சூரியகுமாருக்கு அடுத்த போட்டியிலேயே ஆடியிருந்தார். அதற்குள் காயம் சரியாகிவிட்டதாம். இதேமாதிரிதான் வருண் சக்கரவர்த்திக்கும் காயம் என அறிவித்துவிட்டு அஷ்வினை உள்ளே கொண்டு வந்திருப்பார். ஆனால், வருணுக்கும் இரண்டே நாள் இடைவெளியில் அந்த காயம் சரியாகி போட்டியில் ஆடிவிட்டார்.



ஒரு வீரர் சரியாக பெர்ஃபார்ம் செய்யவில்லை என்றாலோ இல்லை அந்த வீரருக்கு பதில் வேறொரு வீரரை ஆட வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாலோ அந்த உண்மையான காரணத்தை கோலி குறிப்பிடுவதே இல்லை. அதற்கு பதில் காயம் என கூறி சமாளித்துவிடுகிறார்.


காயம் என கூறியபிறகு யாராலும் எதிர்கேள்வியே கேட்க முடியாது. ஆனால், கோலி உண்மையான காரணத்தை கூறி ஒரு வீரரை ட்ராப் செய்து அந்த முடிவு தவறாக செல்லும்பட்சத்தில் கோலி அதற்கு பொறுப்பேற்றாக வேண்டும். பத்திரிகையாளர்களின் எதிர் கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும் அதனாலயே கோலி இப்படி சாக்கு போக்கான காரணங்களை கூறுகிறார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.


இந்த இரண்டாவது போட்டியில் ரஹானே இருக்கமாட்டார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஏனெனில், ரஹானே அவ்வளவு மோசமாக பெர்ஃபார்ம் செய்திருக்கிறார். எதிர்பார்த்தபடியே ப்ளேயிங் லெவனில் ரஹானே இல்லை. ஆனால், அதற்கு சொல்லப்பட்டிருக்கும் காரணம், காயம். முன்பு கோலியும் ரவிசாஸ்திரியும் இணைந்து இப்படி ஸ்டேட்மெண்ட் விட்டார்கள். இப்போது அந்த கூட்டணி கோலி டிராவிட் என மாறியிருக்கிறது. ஆனால், ஸ்டேட்மெண்ட் மட்டும் மாறவில்லை. அக்ரசிவ்வான கோலி பழைய துணிச்சலோடு வெளிப்படையாக பேச வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.