இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபேற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா 55 ரன்கள் எடுத்தார். அத்துடன் அவர் இந்தப் போட்டியில் 5 சிக்சர்கள் விளாசினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 450 சிக்சர்கள் விளாசிய 3ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். 


இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசியுள்ள வீரர்கள் யார்? யார்?


மார்டின் கப்டில்:(365)




நியூசிலாந்து கிரிக்கெட் அணியின்  அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்டில். இவர் தன்னுடைய அதிரடி மூலம் பல முறை நியூசிலாந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். அதிலும் குறிப்பாக லாவகமாக பந்தை சிக்சருக்கு விரட்டுவதில் இவர் வல்லவர். இவர் 47 டெஸ்ட் போட்டிகளில் 23 சிக்சர்கள், 186 ஒருநாள் போட்டிகளில் 181 சிக்சர்கள் மற்றும் 111 டி20 போட்டிகளில் 161 சிக்சர்கள் விளாசியுள்ளார். மொத்தமாக இவர் 365 சிக்சர்களை அடித்துள்ளார். 


மெக்கலம்:(398)




நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மெக்கலம். இவர் தன்னுடைய அதிரடி மூலம் எதிரணியை மிரட்டும் திறமை கொண்டவர். இவர் 101 டெஸ்ட் போட்டிகளில் 107  சிக்சர்கள், 260 ஒருநாள் போட்டிகளில் 200 சிக்சர்கள் மற்றும் 71 டி20 போட்டிகளில் 91 சிக்சர்கள் விளாசியுள்ளார். மொத்தமாக இவர் 398 சிக்சர்களை அடித்துள்ளார்.


ரோகித் சர்மா:(454)




இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டாக்காரர் ரோகித் சர்மா. இவர் அதிரடியை தொடங்கி விட்டால் அது எதிரணிக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்துவிடும். அந்த அளவிற்கு எதிரணியை தன்னுடைய ஆட்டத்தின் மூலம் திணறடிப்பார். இவர் 43 டெஸ்ட் போட்டிகளில் 63 சிக்சர்கள், 227 ஒருநாள் போட்டிகளில் 244 சிக்சர்கள் மற்றும் 118 டி20 போட்டிகளில் 147 சிக்சர்கள் விளாசியுள்ளார். மொத்தமாக இவர் 454 சிக்சர்களை அடித்துள்ளார்.


ஷகித் அஃப்ரிதி:(476)




பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் ஷகித் அஃப்ரிதி. இவர் தன்னுடைய மின்னல் வேக ஆட்டத்தின் மூலம் பாகிஸ்தானிற்கு பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார். இவருடைய சிக்சர்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும். இதன்காரணமாகவே இவருடைய பெயர் பூம் பூம் அஃப்ரிதி என்று அழைக்கப்பட்டார். இவர் 27 டெஸ்ட் போட்டிகளில் 52 சிக்சர்கள், 398 ஒருநாள் போட்டிகளில் 351 சிக்சர்கள் மற்றும் 99 டி20 போட்டிகளில் 73 சிக்சர்கள் விளாசியுள்ளார். மொத்தமாக இவர் 476 சிக்சர்களை அடித்துள்ளார்.


கிறிஸ் கெயில்:(553)




கிரிக்கெட் உலகில் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில் பந்தை சிக்சருக்கு விரட்டும் சிக்சர் மன்னன். இவர் தன்னுடைய சூறாவளி ஆட்டத்தின் மூலம் பல முறை எதிரணியை சிதறடித்துள்ளார். இவர் 103 டெஸ்ட் போட்டிகளில் 98 சிக்சர்கள், 301 ஒருநாள் போட்டிகளில் 338 சிக்சர்கள் மற்றும் 79 டி20 போட்டிகளில் 124 சிக்சர்கள் விளாசியுள்ளார். மொத்தமாக இவர் 553 சிக்சர்களை அடித்துள்ளார். அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் முதலிடமும் பிடித்துள்ளார். 


 


இந்தப் பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள அனைவரும் தங்களுடைய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர் என்பது ஒரு ஒற்றுமையான விஷயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: பதட்டத்தில் ஜெர்சியை மாற்றி நியூசி.,யை 'மர்கய்யா' செய்த ரிஷப்: கைபுள்ளய கைல பிடிக்க முடியல!