இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நிலையில், மூன்றாவது நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய இங்கிலாந்து அணியின் ஜானி பார்ஸ்டோ மிகவும் தடுமாறினார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த பென் ஸ்டோக்ஸ் இரண்டு பொன்னான கேட்ச் வாய்ப்பை அளித்தார். ஆனால், அவர் அளித்த கேட்ச் வாய்ப்பை இந்திய வீரர்கள் ஷர்துல் தாக்கூரும், பும்ராவும் கோட்டை விட்டனர். ஆனாலும், ஷர்துல் தாக்கூர் பந்தில் பென் ஸ்டோக்ஸ் 25 ரன்களில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் ஜானி பார்ஸ்டோ நங்கூரம் போல களத்தில் நின்றார். முதல் பாதியில் தடுமாறிய ஜானி பார்ஸ்டோ ஆட்டம் செல்ல, செல்ல தனது ஆதிக்கத்தை செலுத்தினார். அவருக்கு அம்பயர் அளித்த எல்.பி.டபுள்யூ விக்கெட்டையும் ரிவியூ மூலம் நாட் அவுட் என்று வந்தது ஜானி பார்ஸ்டோவிற்கு அதிர்ஷ்டமாக அமைந்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு மீண்டும் தொடங்கிய பிறகு ஜானி பார்ஸ்டோ சதம் அடித்து அசத்தினார். 37 வயதான ஜானி பார்ஸ்டோவிற்கு இது 11வது டெஸ்ட் சதம் ஆகும்.
அற்புதமான பார்மில் இருக்கும் ஜானி பார்ஸ்டோவிற்கு சாம் பில்லிங்ஸ் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். 149 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து தற்போது 236 ரன்களுடன் ஆடி வருகிறது. களத்தில் ஜானி பார்ஸ்டோ 102 ரன்களுடனும், சாம் பில்லிங்ஸ் 23 ரன்களுடனும் உள்ளனர். ஜானி பா்ர்ஸ்டோவை அவுட்டாக்க இந்திய கேப்டன் பும்ரா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்கூர் தொடர்ந்து வீசி வருகின்றனர். இந்த கூட்டணியை பிரிக்க தற்போது 5வது பவுலராக ரவீந்திர ஜடேஜாவை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்திய அணிக்கு குடைச்சல் கொடுத்த ஜானி பார்ஸ்டோவை ஷமி காலி செய்தார். அவர் 106 ரன்களில் விராட்கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். விராட்கோலியை சீண்டிய ஜானி பார்ஸ்டோ ஆட்டமிழந்த பிறகு அவருக்கு விராட்கோலி பறக்கும் முத்தம் கொடுத்து வழியனுப்பிவைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்