இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது. இதையடுத்து, இரு அணிகளும் மோதிய டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று பர்மிங்காமில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜாஸ் பட்லர் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் களமிறங்கினர்.
போட்டி தொடக்கதில் இருந்தே இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அதிரடியில் ஈடுபட, அவருக்கு உறுதுணையாக ரிஷப் பண்ட் அவ்வபோது பவுண்டரிகளை விரட்டினார். இதன்மூலம் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அதிரடியால் இந்திய அணி 49 ரன்களை எடுத்து இருந்தபோது 31 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்கிய கோலி ஒரு ரன்னில் காலி ஆக, அடுத்த பந்தே பண்ட் 26 ரன்களில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து இருந்தது. 11 வது ஓவரில் அடிக்க முயன்ற சூர்யகுமார் யாதவ் கிறிஸ் ஜார்டன் பந்தில் சாம் கர்ரனிடம் கேட்ச் கொடுக்க, அடுத்த பந்தே ஹர்திக் பாண்டியாவும் 12 ரன்களில் அவுட்டானார்.
இந்திய அணி 14 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து நிதான ஆட்டதை வெளிப்படுத்தி வந்த நிலையில், 16 வது ஓவரில் நிலைத்து நின்று ஆடிய தினேஷ் கார்த்திக் 17 பந்துகளில் 12 ரன்கள் அடித்து ரன் அவுட் முறையில் வெளியேறினார்.
தொடர்ந்து ஒரு பக்கம் விக்கெட்கள் சரியவே, ஜடேஜாவும், ஹர்சல் பட்டேலும் அவ்வபோது பவுண்டரிகளை அடித்து இந்திய அணியை மீட்க முயற்சி செய்தனர். 17 ஓவர் ஜோர்டன் பந்தில் சிக்ஸரை பறக்கவிட்ட ஹர்சல் அடுத்த பந்தே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இந்திய அணி 18 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுக்க, 19 வது ஓவர் வீசிய ஜோர்டன் பந்தில் ஜடேஜா ஒரு பவுண்டரி ஓடவிட்டார். அதே ஓவரில் புவனேஷ்வர் குமார் 2 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
கடைசி ஓவரில் ஜடேஜா ஒரு பவுண்டரி அடித்து அசத்த, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் அடித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 46 ரன்களும், கேப்டன் ரோகித் 31 ரன்களும் எடுத்திருந்தனர். இங்கிலாந்து அணியில் ஜோர்டன் அதிகபட்சமாக 4 விக்கெட்களும், கீளிசன் 3 விக்கெட்களும் எடுத்திருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்