டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினில் ஜூலை 22-ம் தேதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இதில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் மற்றும் முகமது ஷமி ஆகியோர் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ், கில், ஹூடா, சூர்யாகுமார் யாதவ், ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சாம்சன், அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான், ப்ரசித் கிருஷ்ணா, சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று ஒருநாள் போட்டிகளும் வெஸ்ட் இண்டீஸின் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற இருக்கிறது. ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு, கரீபியன் மற்றும் அமெரிக்காவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ளது, அதற்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இப்படி பரபரப்பாக இந்திய அணி உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, உலககோப்பைக்கு தயாராகி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஓப்பனிங் பேட்ஸ்மேனுமாகிய அகாஷ் சோப்ரா, தற்போதய வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இந்திய அணியினைக் குறித்து விமர்சனம் ஒன்றினை தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரின் இந்திய கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளதை மிகவும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டாலும், இந்திய அணி நிர்வாகத்தினை காட்டமாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், தற்போது யார் வேண்டுமானாலும் இந்திய அணியின் கேப்டனாக ஆக முடியும். அவ்வளவு எளிதாக ஒரே ஆண்டில் ஒரு அணிக்கு ஏழு கேப்டன்களை நியமிப்பது என்பது, அணியின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல. மேலும் ஒரு கேப்டனின் கீழ் விளையாடும் வீரர்களுக்கு, கேப்டனின் மனநிலைக்கு ஏற்றவாரு செயல்பட்டு ஒத்துழைப்பு வழங்க முடியும். ஆனால், இப்படியான நிலையில், ஏழு கேப்டன்களை நியமித்தால் வீரர்களின் மனநிலை பல எண்ண ஓட்டங்களை தனக்குள் ஓடவிட்டுக் கொண்டு விளையாடுவார்கள். இது அணியின் வெற்றியினை பாதிக்கும். மேலும், அணியின் எதிர்காலத்திற்கு நல்லது இல்லை எனவும் கூறியுள்ளார். இந்த ஆண்டில் மட்டும், விராட் ஹோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட், ஹர்த்திக் பாண்டியா, பும்ரா மற்றும் தற்போது ஷிகர் தவான் என தொடர்ந்து கேப்டன்களை மாற்றி வந்த நிலையில், ஆகாஷ் சோப்ரா இப்படியான கருத்தினை தெரிவித்துள்ளார்.