பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்துத்திறன்களிலும் பங்களாதேஷ் எனும் வங்கதேச கிரிக்கெட் அணியை துவம்சம் செய்துக் கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. சென்னையில் மீண்டும் ஒரு அபார வெற்றியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


மண்ணின் மைந்தன் அஸ்வின், தத்துப்பிள்ளை ஜடேஜா:


சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டின் முதல் இரண்டு மணி நேரம் மட்டும், பங்காளதேஷின் கை ஓங்கியிருந்தது. ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் போன்ற நட்சத்திர வீரர்களை உடனுக்குடன் பெவிலியனுக்கு அனுப்பி, முழு உற்சாகத்தில் இருந்தது வங்கதேச அணி.




ஆனால், மண்ணின் மைந்தன் அஸ்வினும் சிஎஸ்கே மூலம் சென்னையின் தத்துப்பிள்ளையான ரவீந்திர ஜடேஜாவும் இந்திய அணியை, சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். குறிப்பாக, ரவிசந்திரன் அஸ்வின் அபாரமாக விளையாடி, சதமடித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு ஜடேஜாவும் துணைநின்றது வரலாறு.


இரண்டாம் நாள் ஆட்டத்தில், உடனுக்குடன் இந்தியஅணி விக்கெட்டுகளை இழந்து, முதல் இன்னிங்சில் 376 ரன்களுக்கு  ஆட்டமிழந்தது. வங்கதேச பந்துவீச்சாளர் ஹசன் மெஹ்மத் 5 விக்கெட்டுகளையும் தக்சின் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தியாவின் அஸ்வின் 113 ரன்களையும் ஜடேஜா 86 ரன்களையும் ரிஷப் பந்த் 39 ரன்களையும் எடுத்தனர்.  


கிரிக்கெட் ஜோதிடம்:


அதன்பின் ஆடத்தொடங்கிய பங்களாதேஷ் அணி,  ஆரம்பத்தில் இருந்தே தொடங்கியது, சிராஜ்ஜூம் பும்ராவும் வங்கதேச பேட்ஸ்மேன்களைத் திணறடித்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தபோது, அனுபவ வீரரான ஷாகித் அல் ஹசன் மட்டும் நிலைத்து விளையாடி அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 4 விக்கெட்டுகளையும் சிராஜ், ஆகாஷ் தீப் , ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 


வலுவான நிலையில் இருந்த இந்தியஅணி, ஃபோலோ ஆன் கொடுக்காமல், தமது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.  இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில்,  83 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து, ஒட்டுமொத்தமாக 308 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது இந்திய அணி. கில்லும் பந்தும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.




தற்போது ஆடுகளம் செயல்படும் விதத்தைப் பார்க்கும் போது, நாளைக்குள் போட்டி முடிந்துவிடுமோ என்ற எண்ணம்தான், மைதானத்திற்கு வந்த ரசிகர்கள் மட்டுமல்ல, தொலைக்காட்சிகளில் பார்க்கும் கோடிக்கணக்கான ரசிகர்களும் கருதுகின்றனர். எனவே, சென்னையில் மீண்டும் ஒரு அபார வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது இந்திய அணி என்பதுதான், 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நாம் சொல்லும் கிரிக்கெட் ஜோதிடம். 


இதுமட்டுமல்ல, இந்திய அணியின் மிகப்பெரிய நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாடிய விதத்தைப் பார்த்தால், விரைவில் இவர்களுக்கு ரிட்டயர்மெண்ட் கொடுத்தால் நல்லது என்ற பேச்சும் ரசிகர்கள் வட்டாரத்தில் வைரலானது. அந்த அளவுக்கு மோசமாக இரண்டு இன்னிங்சிலும் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.  


இன்றைய ஆட்டத்தின் போது, தம்முடைய 3-வது விக்கெட்டை பும்ரா எடுத்தபோது, டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, டி 20 போட்டி என மூன்று போட்டிகளையும் சேர்த்து 400 விக்கட்டுகள் எடுத்த 6-வது இந்திய வீரர் என்ற சாதனையைச் செய்தார் பும்ரா. இதற்கு முன், கபில்தேவ், ஜாகீர் கான், ஜவகல் ஸ்ரீநாத், முகம்மத் ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோரை அடுத்து, தற்போது பும்ரா இந்த சாதனையைச் செய்துள்ளார்.