உலகக்கோப்பை  கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதாவது நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்த்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் மதியம் இரண்டு மணிக்கு தொடங்கவுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு முன்னர் 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோதியது. அதில் ஆஸ்திரேலியா அணியே வெற்றி பெற்றது. அதேபோல் இந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளே மோதின. அந்த போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியே வெற்றி பெற்றது.


இதனால் நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும், இந்தியா வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் எனவும் தெரிவித்து வருகின்றனர். 


இதனால் இந்த போட்டியின் மீது அதிகப்படியான ஆர்வம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி தொடர்பாக ஐசிசி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஏற்பாடும் பெரும் வைரலாகி வருகின்றது. அதேபோல் இந்தியாவில்  போட்டி நடைபெறுவதால் பிசிசிஐ-யும் தனது தரப்பில் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் யார் யார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 


போட்டியின் களநடுவர்களாக ரிச்சர்ட்ஸ் கெட்டில்பரோ மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோரும், மூன்றாவது நடுவராக ஜோயல் வில்சன் மற்றும் போட்டி நடுவராக (மேட்ச் ரெஃப்ரி) ஆண்டி பைகிராஃப்ட் ஆகியோர் ஐசிசி தரப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. களநடுவர்களான ரிச்சர்ட்ஸ் கெட்டில்பரோ மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த்  ஆகியோர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஆவர். 


இதில் களநடுவர்களில் ஒருவரான ரிச்சர்ட்ஸ் கெட்டில்பரோவை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விடமாட்டார்கள். ஆமால் 2019ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டியில்  நியூசிலாந்து அணிக்கு எதிராக தோனி ரன் அவுட் ஆனபோது தனது அதிர்ச்சியை களத்திலேயே வெளிப்படுத்தி மூன்றாவது நடுவர் முடிவினை எடுக்க பரிந்துரைத்தார். அதேபோல் நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் விராட் கோலி வங்கதேச அணிக்கு எதிராக தனது 48வது ஒருநாள் சதத்தினை அடிக்க முற்பட்டபோது நசும் அகமது வைய்டு வீசினார். அப்போது அணியின் வெற்றிக்கு 2 ரன்களும் விராட் கோலி சதத்தை எட்ட 3 ரன்களும் தேவைப்பட்டது. ஆனால் களநடுவர் கெட்டில்பரோ வைய்டு தரவில்லை.


கோலி தனது சதத்தை எட்ட வேண்டும் என்பதற்காக கெட்டில்பரோ வேண்டுமென்றே அவ்வாறு செய்ததாக பலர் குற்றம் சாட்டினர். நடுவருக்கு "பிளேயர் ஆஃப் தி மேட்ச்" விருது வழங்கப்பட வேண்டும் என்று சிலர் கிண்டலாகக்  கூறினார். ஆனால் அவர் அந்த பந்துக்கு வைய்டு தராமல் இருந்ததற்கு ஐசிசி விதிகளின் படி சரியான காரணங்கள் இருந்ததையும் சிலர் விளக்கினர். இதெல்லாம் ஒரு புறம் இருக்க இவர் களநடுவராக இருந்த நாக் - அவுட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தியா களமிறங்கிய போட்டிகளில் ஐசிசி போட்டிகளில் ரிச்சர்ட்ஸ் கெட்டில்பரோ இதுவரை களநடுவராக இருந்த போட்டிகள் விபரம்: 



  • 2014 உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டி 

  • 2015 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி

  • 2016 உலகக் கோப்பை டி20 அரையிறுதிப் போட்டி 

  • 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி 

  • 2019 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி 

  • 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 


மேற்குறிப்பிட்ட அனைத்து போட்டிகளிலும் இந்தியா தோல்வியைத் தழுவியது.