இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. தொடரை தொடங்கியது முதல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வரை தோல்வியே சந்திக்காமல் பெரும் உத்வேகத்தில் உள்ள இந்திய அணியும், இந்த தொடரை மிகவும் மோசமாக தொடங்கி பெரும் போராட்டத்து மத்தியில் இறுதிப் போட்டிக்கு உத்வேகத்துடன் தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி வரும் 19ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய அணி இதற்கு முன்னர் களம் கண்ட உலகக்கோப்பைகளை விடவும் இம்முறை பலமான அணியாக உள்ளதால் இந்திய அணி மூன்றாவது உலகக்கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்திய அணி இந்த தொடரின் தொடக்கத்தில் முதல் 5 போட்டிகளில் சேஸிங்கில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணியின் பேட்டிங்கின் மீதுதான் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. அதேநேரத்தில் பந்து வீச்சு மீது கேள்விகள் எழுந்தது. ஆனால் அதன் பின்னர் இந்திய அணி அரையிறுதிப் போட்டிவரை முதலில் பேட்டிங் செய்து மிகச்சிறப்பாக பந்து வீசி எதிரணிகளை நடுங்கச் செய்துள்ளது.
இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா தொடக்கவீரராக களமிறங்கி எதிரணி பந்து வீச்சு குழுவின் அனைத்து ப்ளேன்களையும் சின்னாபின்னமாக்கி அவர்களின் கான்ஃபிடன்ஸையும் சிதறடித்து வருகின்றார். இது இவருக்கு அடுத்து வரும் பேட்ஸ்மேன்களான கோலி, ஸ்ரேய்ஸ் ஐயர், கே.எல். ராகுல் என அனைவரும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த பெரும் உதவியாக இருந்தது.
நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித், விராட், ஸ்ரேயஸ் என அனைவரும் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் டாப்பில் உள்ளனர்.
விராட் கோலி 711 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இவர் இந்த தொடரில் இரண்டு சதங்களும் 5 அரைசதங்களும் விளாசியுள்ளார். இவர் இந்த உலகக் கோப்பையில் 10 போட்டிகளில் விளையாடி 64 பவுண்டரிகளும் 9 சிக்ஸர்களும் விளாசியுள்ளார்.
விராட் கோலிக்கு அடுத்தபடியாக கேப்டனும் தொடக்க வீரருமான ரோகித் சர்மா 10 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் 3 அரைசதங்கள் விளாசி 550 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 5வது இடத்தில் உள்ளார். இவர் இந்த உலகக்கோப்பையில் இதுவரை 62 பவுண்டரிகளும் 28 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் நடப்பு உலகக்கோப்பையிலும் ஒட்டுமொத்த உலகக்கோப்பையிலும் (51 சிக்ஸர்கள்) விளாசி முதல் இடத்தில் உள்ளார்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 4வது வீரராக களமிறங்கும் ஸ்ரேயஸ் ஐயர் நீண்ட காலமாக இந்திய அணி தேடிவந்த வீரர் என்றே கூறலாம். 4வது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் டாப் 10இல் இடம் பெற்றுள்ளார் என்றால் அது ஸ்ரேயஸ் ஐயரின் அசாத்தியமான பேட்டிங்கினால்தான் முடியும். இரண்டு சதங்கள் 3 அரைசதங்கள் என மொத்தம் 526 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார்.
இவர்கள் இல்லாமல் கே.எல். ராகுல் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடும் சூர்யகுமார் யாதவ் என அனைவரும் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கின்றனர்.