நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண இதற்கு முன்பு உலகக் கோப்பையை வென்ற கேப்டன்கள் கபில் தேவ், எம்.எஸ்.தோனி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உலகக் கோப்பை திருவிழா இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. அந்த வகையில் பல்வேறு திருப்பங்களுடன் நடைபெற்ற இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 19 ஆம் தேதி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.


இதில், உலகக் கோப்பை தொடரில் விளையாடிய 10 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி மற்றும் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையுடன் இந்திய அணியும், 5 முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது.


உலகக் கோப்பையை வென்ற கேப்டன்களுக்கு அழைப்பு?:


குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுவதால், இப்போது அந்த நகரம் விழாக் கோலம் காண்கிறது. அந்த வகையில், இந்த உலகக் கோப்பையை காண்பதற்கு இதற்கு முன்னதாக உலகக் கோப்பையை வென்ற அணிகளின் கேப்டன்களுக்கு போட்டியை நேரில் காண்பதற்கான் அழைப்பு விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.


அதன்படி, உலகக் கோப்பையை கடந்த 1975 மற்றும் 1979  ஆம் ஆண்டு வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சர் கிளைவ் லாயிட், 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ், 1987 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆலன் பார்டர், 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் இம்ரான் கான் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அதேபோல், கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றிய இலங்கை அணி கேப்டன் அர்ஜுன ரணதுங்க, 1999ஆம் ஆண்டு உலகக் கோப்பையை தங்கள் வசபடுத்திய ஸ்டீவ் வாஹ் மற்றும் 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கிப் பாண்டிங் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் எம்.எஸ்.தோனி, 2015 ஆம் ஆண்டு கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க்  ஆகியோருக்கும் அழைப்பு.


மேலும், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயோன் மோர்கன் ஆகியோருக்கும் போட்டியை நேரில் கண்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி, இதுவரை உலகக் கோப்பையை வென்ற 10 கேப்டன்கள் உலகக் கோப்பையை நேரில் காண்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.


மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத்தில் இறுதிப் போட்டி நடைபெறுவதால் போட்டியை நேரடியாக காண உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இது தொடர்பான தகவல்கள் ஏதும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: IND vs AUS Final: இறுதிப்போட்டியில் களமிறங்கப்போகும் அஸ்வின்! ஏன்? ஏதற்கு? எப்படி?- ஸ்பெஷல் ரிப்போர்ட்


மேலும் படிக்க: 2003 WC IND vs AUS: 2003 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நடந்தது என்ன? இந்திய ரசிகர்கள் மனதின் ஆறாத வடு!