India vs Australia Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? தொடரை விட்டு வெளியேறப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நாளை நடக்கிறது. இதில், இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. 


இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி போலவே இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டி என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. 


நேருக்கு நேர்: ( ஒருநாள்)


மொத்தம் விளையாடிய போட்டிகள் - 151


ஆஸ்திரேலியா வெற்றி - 84


இந்தியா வெற்றி - 57


முடிவு இல்லாதது - 10


ஒருநாள் போட்டி உலகக்கோப்பை:


மொத்தம் விளையாடிய போட்டிகள் - 14


ஆஸ்திரேலியா - 9


இந்தியா - 5


சாம்பியன்ஸ் டிராபி:


மொத்தம் விளையாடிய போட்டிகள் - 4


ஆஸ்திரேலியா - 1


இந்தியா - 2


முடிவு இல்லாதது - 1



கடந்த 20 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணிக்கு சவால் தரும் அணியாக உலக அரங்கில் திகழ்வது இந்திய அணி ஆகும். கடந்த 2003ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா தோற்கடித்தது முதலே இரு அணிகளும் மோதும் போட்டியின்போது பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 


கடந்த 2023ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடித்து கோப்பையை வென்றபோது இன்னும் அதிகமாகியது. கடந்த டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா தொடரை விட்டு வெளியேற்றியது. 


இந்த சூழலில், 50 ஓவர் உலகக்கோப்பைத் தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக நாளை ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதுகிறது. 


எங்கே நடக்கிறது?


சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்தினாலும் பாதுகாப்பு காரணமாக இந்த தொடரில் இந்தியா அங்கு செல்லவில்லை. இதனால், இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கிறது. இதனால், நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியும் துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. 


இந்த தொடரைப் பொறுத்தவரை இரு அணிகளும் இதுவரை அவர்களது குழுவில் எந்த தோல்வியையும் சந்திக்கவில்லை. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, சுப்மன்கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் பேட்டிங்கில் பலமாக உள்ளனர். 


பலம்:


ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், ஜடேஜா ஆல்ரவுண்டர்களாக உள்ளனர். பந்துவீச்சைப் பொறுத்தவரை முகமது ஷமி, ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் உள்ளனர். கடந்த போட்டியில் அசத்திய வருண் அரையிறுதியில் களமிறங்குவாரா? என்பது நாளையே தெரிய வரும். 


ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், ஸ்டோய்னிஸ், மார்ஷ் என முன்னணி வீரர்கள் இல்லாவிட்டாலும் அவர்கள் ஹெட், ஸ்மித், லபுஷேனே, ஷார்ட், இங்கிலீஷ், மேக்ஸ்வெல் ஆகியோரது பேட்டிங் பலத்தைப் பொறுத்து களமிறங்கியுள்ளனர். அந்த அணியின் பந்துவீச்சில் ஜம்பா, துவார்ஷியஸ், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் இருந்தாலும் அவர்கள் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும்.


ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலியாவுடனான அரையிறுதி போட்டிகளில் இந்திய அணி சிறப்பாகவே ஆடியுள்ளது. இதனால், இந்திய அணி வெற்றிக்காக முழு முனைப்பில் களமிறங்கும் என்றும், அதேசமயம் ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்காக போராடும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே கூறலாம்.