ஆசிய கோப்பையை எட்டாவது முறையாக வென்ற இந்திய அணி, தற்போது நாடு திரும்பியுள்ளனர். ஒருநாள் உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது.
வருகின்ற செப்டம்பர் 22ம் தேதி முதல் தொடங்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இன்று இரவு 8.30 மணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கலாம். இந்த அணி அறிவிக்கும்போது இந்திய அணியின் அனுபவ வீரர்கள் சிலருக்கு ஓய்வு கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஓய்வு அளிக்கப்படலாம்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு உலகக் கோப்பை போட்டிகள் உடனடியாக நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், வீரர்களின் பணிச்சுமை அதிகரிக்கும். இந்திய அணியின் அனுபவ வீரர்களுக்கு அவர்களின் பணிச்சுமையை குறைக்க ஓய்வு அளிக்கலாம். எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
கோலி நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடி வருவதால், உலக கோப்பைக்கு முன்னதாக அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம். உலகக் கோப்பையிலும் பல போட்டிகள் விளையாட வேண்டியிருக்கும். ரோஹித்துக்கும் அப்படித்தான். அவர்களுக்கும் இடைவேளை தேவை. வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்பியதோடு சிறப்பாக செயல்பட்டார். ஆனால் இப்போது அவருக்கு ஓய்வு தேவை.
ரோஹித் இல்லாத பட்சத்தில் இஷான் கிஷனுக்கு ஓபன் வாய்ப்பு கிடைக்கலாம். இந்திய அணியின் முக்கிய வீரர்கள் பட்டியலில் இஷான் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டார். எனவே, அவர் அணியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும், அனைவரின் பார்வையும் அக்சர் படேல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் உடற்தகுதி மீது உள்ளது. ஆசிய கோப்பை 2023ல், வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர்-4 போட்டியில் காயம் காரணமாக அக்சர் படேல் இறுதிப் போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு பிடிப்பு பிரச்சனையால் குரூப் போட்டிகளுக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாட முடியவில்லை. இந்த இரு வீரர்களும் ஒருநாள் உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெற்றுள்ளனர் . இவ்வாறான நிலையில் இவர்கள் இருவரின் உடற்தகுதி தொடர்பான நிலைமையும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்சர் படேலுக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர்:
அக்சர் படேல் உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை என்றால் அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சுந்தரை முயற்சிக்கலாம், அதனால் அவர் உலகக் கோப்பைக்கு முழுமையாக தயாராகலாம். இது தவிர, அணியில் வேறு ஏதேனும் முக்கிய மாற்றம் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியை இந்திய அணி மொஹாலியிலும், கடைசி 2 போட்டிகள் இந்தூர் மற்றும் ராஜ்கோட் மைதானங்களில் செப்டம்பர் 24 மற்றும் 27ம் தேதிகளிலும் நடைபெறவுள்ளது.