Asia Cup 2023: இந்த ஆண்டு ஆசிய கோப்பைத் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 17ஆம் தேதிவரை நடைபெற்றது. இம்முறை ஒருநாள் போட்டி வடிவில் நடத்த திட்டமிடப்பட்ட ஆசிய கோப்பை தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் நடத்தின. தொடரை நடத்தும் நாடுகள் மட்டும் இல்லாது, இந்தியா, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் களமிறங்கின. இதில் நேபாளம் அணி முதல் முறையாக ஆசிய கோப்பைத் தொடரில் விளையாடியது. அதேபோல், நேபாளம் அணி இந்த தொடர் மூலம் சர்வதேச ஒருநாள் தொடரில் அறிமுகமானது.
களமிறங்கிய 6 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் ஒரு குழுவிலும், நடப்புச் சாம்பியனான இலங்கை, வங்காள தேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மற்றொரு குழுவிலும் இருந்தன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவின் அடிப்படையில் அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முடியும் என விதிகள் வகுக்கப்பட்டன.
இந்த தொடரில் இறுதிப் போட்டியுடன் மொத்தம் 13 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்பட்டது. லீக் சுற்றின் முடிவில் நேபாளம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. லீக் சுற்றில் இந்தியா பாகிஸ்தான் ஆட்டம், மழையால் தடைபட்டது. குறிப்பாக இந்தியா முழுமையாக பேட்டிங் செய்த பின்னர் மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது. அதேபோல் சூப்பர் 4 சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி மழையால் தடைபட்டதால், போட்டி ரிசர்வ் டேவிற்கு மாற்றப்பட்டது.
சூப்பர் 4 சுற்று முடிவில் பாகிஸ்தான் மற்றும் வங்காள தேச அணிகள் வெளியேறின. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்டன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி, இறுதில் புஸ்வானமாகிப் போய்விட்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல்-அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய முகமது சிராஜ்க்கு ஆட்டநாயகன் விருதும், இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல் பட்டதற்காக, இந்திய அணியின் குல்திப் யாதவ்க்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்த தொடரினைப் பொறுத்தவரையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில், 6 போட்டிகளில் 302 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். இவரின் அதிகபட்ச ரன் 121 ரன்கள் ஆகும். இரண்டாவது இடத்தில் இலங்கை அணியின் குஷல் மெண்டிஸ் 270 ரன்கள் சேர்த்துள்ளார். மூன்றாவது இடத்தில் இலங்கையின் சதீரா சமர விக்ரமா 215 ரன்கள் சேர்த்துள்ளார். அதேபோல் இந்த தொடரில் ஒரு போட்டியில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் எடுத்தவர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம். இவர் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் 151 ரன்கள் சேர்த்திருந்தார்.
அதேபோல் பந்து வீச்சில் இலங்கை அணியின் மதீஷா பதிரானா 6 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இலங்கை அணியின் துனித் வெல்லலகே 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி சிராஜ் மூன்றாவது இடத்தில் உள்ளார்.