இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானியும் மைதானத்திற்கு வந்து பார்வையிட்டு வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர்.
இந்தநிலையில், தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 7 ரன்கள் எடுத்திருந்தபோது உமேஷ் யாதவ் வீசிய பந்தை எதிர்கொண்டார். அப்போது, அவரது பேட்டின் விளிம்பில் பட்ட பந்தானது விக்கெட் கீப்பர் கே.எஸ். பாரத்திடம் சென்றது. அந்த எளிதான கேட்சை கே.எஸ்.பாரத் தவறவிட்டார்.
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸின் 6வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ், ஐந்தாவது பந்தை ஹெட் ஆஃப் சைடில் ஆட முயற்சித்தார். அந்த கேட்சை பாரத் தவறவிட்டு இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அதன்பிறகு, இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், டிராவிஸ் ஹெட்டை 32 ரன்களில் வெளியேற்றினார்.
கே.எஸ். பாரத்துக்கு வாய்ப்பு ஏன்..?
நாக்பூரின் நடந்த முதல் டெஸ்ட்டில் அறிமுகமான பாரத், இந்த தொடர் முழுவதும் விளையாடி 57 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதையடுத்து, கே.எஸ். பாரத்துக்கு பதிலாக இஷான் கிஷன் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ரோகித் சர்மா கே.எஸ். பாரத்திற்கே வாய்ப்பு வழங்கி ஏன் என்றும் விளக்கம் அளித்தார். அதில், “ பண்டை பற்றி சொன்னால், அவரை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம். அவர் பேட் மற்றும் கீப்பிங்கில் என்ன செய்வார் என்பது நமக்கு தெரியும். இஷான் கிஷன் இடது கை பேட்ஸ்மேன் என்பதால், அவரை டெஸ்ட் அணிக்கு அழைத்து வந்தோம்.
கே.எஸ். பாரத் உள்நாட்டு கிரிக்கெட்டில் நிறைய நாள் விளையாடியுள்ளார். நிறைய ரஞ்சி போட்டிகள், இந்தியா ஏ, மண்டலங்கள் என நிறைய விளையாடி நிறைய ரன்கள் எடுத்துள்ளார். எனவே இங்கு ஆடுவதை பொறுத்து அவரை மதிப்பிடுவது நியாயமற்றது. யாராவது தொடரில் அறிமுகமானால், நீங்கள் அவருக்கு போதுமான இடம் அல்லது போதுமான இன்னிங்ஸைக் கொடுக்க வேண்டும், அவர் ஒரு பெரிய ஸ்கோரை அடிக்க முடியும். இந்த தொடரின் தொடக்கத்தில் நான் பாரத்திடம் பேசும்போது எந்த மாதிரியான ஆடுகளங்களில் விளையாடுகிறோம் அல்லது என்ன சவால்கள் உள்ளன என்பதைப் பற்றி மட்டும் யோசியுங்கள். உங்களை நிரூபிக்க போதுமான நேரம் கிடைக்கும், ஏனெனில் இந்த ஆடுகளங்கள் எளிதானவை அல்ல” என்று தெரிவித்தார்.