ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது சொந்த காரணங்களுக்காக உடனடியாக நாடு திரும்பினார். இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்குள் கம்மின்ஸ் திரும்பவில்லை என்றால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


இந்திய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்டில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 


இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் வருகின்ற மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக நாடு திரும்பினர். அதே நேரத்தில் மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 


இந்த போட்டிக்கு வருகின்ற நவம்பர் 1ம் தேதி தொடங்கவுள்ளதால், இன்னும் 10 நாட்கள் இடைவெளி இருக்கிறது. அதற்குள் பாட் கம்மின்ஸ் இந்தியாவிற்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது. 3வது டெஸ்ட் போட்டிக்குள் கம்மின்ஸ் திரும்பவில்லை என்றால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார். 


கடைசியாக நடந்த டெல்லி டெஸ்டில் ஆஸ்திரேலியா லெவன் அணியில் ஒரே வேகப்பந்து வீச்சாளராக கம்மின்ஸ் களமிறங்கினார். ஆனால், நான்காவது இன்னிங்ஸில் அவர் பந்துவீசவில்லை. கடந்த 2021 வேகப்பந்து வீச்சாளர் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து இரண்டு முறை கம்மின்ஸ் இல்லாத நிலையில் ஸ்மித் கேப்டனாக இருந்தார். கடந்த 2021-22 ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட்டை அடிலெய்டில் கம்மின்ஸ் கொரோனா பாதிப்பு காரணமாக தவறவிட்டார்.  அதேபோல், கடந்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த பகல்-இரவு டெஸ்டிலும் காயம் காரணமாக கம்மின்ஸ் விளையாடவில்லை.


ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர்கள்:


ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியில் ஸ்காட் போலண்ட் மற்றும் லான்ஸ் மோரிஸ் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட்டை ஆஸ்திரேலிய அணி எதிர்பார்க்கிறது. மேலும், ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் விரலில் எலும்பு முறிவு காரணமாக இந்தியாவில் நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆஸ்திரேலியா டூர் ஆஃப் இந்தியா 2023: 


டெஸ்ட் தொடர்:


மார்ச் 1-5: மூன்றாவது டெஸ்ட் (ஹோல்கர் மைதானம் - மத்திய பிரதேசம்)
மார்ச் 9-13: நான்காவது டெஸ்ட் (நரேந்திர மோடி மைதானம் - அகமதாபாத்)


ஒருநாள் தொடர்:


மார்ச் 17: முதல் ஒருநாள் போட்டி (மும்பை வான்கடே மைதானம்)
மார்ச் 19: இரண்டாவது ஒருநாள் போட்டி (டாக்டர். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டினம்)
மார்ச் 22: மூன்றாவது ஒருநாள் போட்டி (எம்ஏ சிதம்பரம் மைதானம் - சென்னை)


ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மாட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டோட் , மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்


இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ். பாரத்  (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ் , ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்