மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 8வது தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி, வருகின்ற 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஏ பிரிவில்  நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. விதிகளின்படி லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். 


இந்திய மகளிர் அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இதில், இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். எனவே, இந்த போட்டி இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக இருக்கும். 


இந்தநிலையில், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இன்று நடைபெறும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதன் மூலம் டி20 போட்டிகளில் முக்கிய உலக சாதனையை படைக்க இருக்கிறார். 


உலகின் முதல் வீராங்கனை:


கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கவுர், தனது 149வது போட்டியில் களமிறங்கினார். தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்றைய அயர்லாந்து அணிக்கு எதிராக கவுர், தனது 150வது டி20 போட்டியில் களமிறங்குகிறார். இதன்மூலம், ஒட்டுமொத்த ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் 150 டி20 போட்டிகளில் விளையாடும் முதல் வீராங்கனை என்ற பெருமையை படைக்க இருக்கிறார். மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சுசி பேட்ஸ் 143 போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 


பேட்டிங் மைல்கல்:


ரன் எண்ணிக்கையிலும்  இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மிகப்பெரிய மைல்கல்லை எட்ட இருக்கிறார். டி20 போட்டிகளில் 3000 ரன்களை கடக்க கவுருக்கு, இன்னும் 7 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. தற்போது, 2993 ரன்களுடன் இருக்கிறார். இன்றைய அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கவுர், 7 ரன்களை எடுத்து 3000 ரன்களை கடந்தால் உலகின் நான்காவது மற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெறுவார். 


இதற்கு, முன்னதாக நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் 3764 ரன்கள் குவித்து முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் 3346 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் ஸ்டாபானி டெய்லர் 3166 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 


2023 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. கடந்த சனிக்கிழமை இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி களமிறங்கி தனது முதல் தோல்வியை சந்தித்தது. 


இதையடுத்து, அயர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றிபெற்றால் நிச்சயம் அரையிறுதிக்கு தகுதிபெறும். அதற்காக, கவுர் தலைமையிலான இந்திய அணி நிச்சயம் போராடும். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு க்கெபெர்ஹா ,செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் நடைபெறுகிறது. 


இரு அணிகள் விவரம்:


இந்தியா: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாடே.


அயர்லாந்து: லாரா டெலானி (கேப்டன்), ஜார்ஜினா டெம்ப்சே, ஏமி ஹண்டர், ஷௌனா கவனாக், அர்லீன் கெல்லி, கேபி லூயிஸ், லூயிஸ் லிட்டில், சோஃபி மக்மஹோன், ஜேன் மாகுவேர், காரா முர்ரே, லியா பால், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட், ரேச்சல் டெலானி, எமியர் ரிச்சர்ட்சன், மார்கி ரிச்சர்ட்சன்