IND vs ENG: ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில், இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. 18 பேர் கொண்ட அணிக்கு கேப்டனாக சுப்மன்கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப்பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித்திற்கு பிறகு இந்திய அணியை அபாரமாக வழிநடத்திய பும்ராவிற்கு கேப்டன்சி வழங்கப்படவில்லை.
பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணி:
சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணியில் ரிஷப்பண்ட், ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ஜடேஜா, துருவ் ஜோரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப்சிங், குல்தீப் யாதவ் இடம்பிடித்துள்ளனர்.
ஸ்ரேயாஸ்க்கு நோ சான்ஸ்:
பிசிசிஐ அறிவித்துள்ள இந்த அணிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தாலும், பல முக்கிய வீரர்களுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உலா வரும் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்யாதது பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
ரோகித் சர்மா, கோலி இருவரும் டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்றுள்ள நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சுப்மன்கில், ரிஷப்பண்ட், ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, துருவ் ஜோரல் என பேட்டிங் இருந்தாலும் இந்த பேட்டிங் ஆர்டர் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், அவர்களது சீதோஷ்ண நிலைக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்துமா? என்ற கேள்வி உள்ளது.
மிடில் ஆர்டர் என்ன செய்யப்போகிறது?
இந்த பேட்ஸ்மேன்களில் சுப்மன்கில், கே.எல்.ராகுல், கே.எல்.ராகுல், ஆல்ரவுண்டர் ஜடேஜா தவிர யாருக்கும் பெரிய பேட்டிங் அனுபவம் டெஸ்ட் போட்டிகளில் இல்லை. இதனால், அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள மற்ற வீரர்களுடன் ஒப்பிடும்போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு அனுபவம் உள்ளது. அதனால், அவரை அணியில் எடுத்திருக்க வேண்டும் என்றே பலரும் கூறுகின்றனர்.
கோலி, ரஹானே, புஜாரா ஆகிய வீரர்கள் இல்லாத நிலையில் இந்தியாவின் மிடில் ஆர்டர் மிகப்பெரிய சவாலை சந்திக்க உள்ளது. இங்கிலாந்தின் வேகம், சுழலை எதிர்கொள்ள மிடில் ஆர்டரில் ஒரு வலுவான பேட்ஸ்மேன் தேவை. அணியில் தேர்வாகியுள்ள துருவ் ஜோரல், கருண் நாயர், சுதர்சன் ஆகியோருடன் ஒப்பிடும்போது அந்த அனுபவம் ஸ்ரேயாஸ் ஐயருக்கு உண்டு.
ஸ்ரேயாஸ் ஐயர் கடந்தாண்டு ரஞ்சி தொடரில் 452 ரன்களை குவித்தார். அதில் 2 சதங்கள் அடங்கும் சராசரி 90.40 வைத்திருந்தார். விஜய் ஹசாரே தொடரில் 325 ரன்கள் எடுத்தார். அதில் 2 சதங்களும் அடங்கும். அதில் 325 ரன்கள் சராசரியாக வைத்திருந்தார். சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் 1 சதம், 1 அரைசதத்துடன் 345 ரன்கள் எடுத்துள்ளார். 49.28 சராசரியாக வைத்துள்ளார். இதில் சையத் முஷ்டாக் அலி கோப்பையையும் வென்றுள்ளார்.
ரசிகர்கள் வருத்தம்:
மேலும், சமீபகாலமாக ஸ்ரேயாஸ் ஐயரின் செயல்பாடுகள் அணிக்கு மிகப்பெரிய பலமாகவே உள்ளது. இந்த சூழலில் அவர் அணியில் இல்லாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 சதம், 5 அரைசதங்களுடன் 811 ரன்கள் எடுத்துள்ளார்.
அவர் 81 முதல்தர போட்டிகளில் ஆடி 15 சதங்கள், 33 அரைசதங்களுடன் 6 ஆயிரத்து 363 ரன்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 233 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல, லிஸ்ட் ஏ போட்டிகளில் 157 போட்டிகளில் ஆடி 14 சதங்கள், 39 அரைசதங்களுடன் 6 ஆயிரத்து 333 ரன்கள் எடுத்துள்ளார்.
30 வயதான ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக மட்டுமின்றி இந்திய ஏ, இந்தியா பி, இந்தியா ரெட், இந்தியா கிரீன், ரெஸ்ட் ஆஃப் இந்தியா, மும்பை அணிக்காகவும் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.