India Test Squad For England Series: இங்கிலாந்து அணிக்கான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கில் நியமனம்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கான, இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 18 வீரர்களை உள்ளடக்கிய இந்த அணிக்கு, சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து காலியான, கேப்டன் பதவிக்கு நீண்ட இலக்கை கருத்தில் கொண்டு சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு:
பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் 18 வீரர்கள் அடங்கியுள்ளனர். அதில், சுப்மன் கில், ரிஷப் பண்ட், யஷஷ்வி ஜெய்ஷ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவிந்திர ஜடேஜா, த்ருவ் ஜுரெல், வாஷிங்டன் சுந்தர், ஷ்ரதுல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் நடப்பு ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் முதல் முறையாக இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அணி எப்படி உள்ளது?
பேட்ஸ்மேன்கள் பிரிவில் சுப்மன் கில், ரிஷப் பண்ட், யஷஷ்வி ஜெய்ஷ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர் மற்றும் த்ருவ் ஜுரெல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்கள் பிரிவில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முழு நேர சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் மட்டுமே இருக்க, ஆல்-ரவுண்டர் பிரிவில் நிதிஷ் குமார் ரெட்டி, ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷ்ரதுல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உத்தேச பிளேயிங் லெவன்:
- கே.எல். ராகுல்
- யஷஷ்வி ஜெய்ஷ்வால்
- அபிமன்யு ஈஸ்வரன்/ கருண் நாயர்
- சுப்மன் கில்
- ரிஷப் பண்ட்
- ரவீந்திர ஜடேஜா/ வாஷிங்டன் சுந்தர்
- நிதிஷ் குமார் / ஷ்ரதுல் தாக்கூர்
- ஜஸ்பிரித் பும்ரா
- ஆகாஷ் தீப்
- முகமது சிராஜ்
- பிரஷித் கிருஷ்ணா
போட்டி விவரங்கள்:
இந்த தொடரானது ஜுன் 20ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி,
- முதல் டெஸ்ட் - ஜுன் 20-24, லீட்ஸ் மைதானம்
- இரண்டாவது டெஸ்ட் - ஜுலை 2-6, எட்க்பஸ்டன்
- மூன்றாவது டெஸ்ட் - ஜுலை 10 - 14, லார்ட்ஸ் மைதானம்
- நான்காவது டெஸ்ட் - ஜுலை 23-27, ஓல்ட் ட்ராஃபர்ட் கிரிக்கெட் மைதானம்
- ஐந்தாவது டெஸ்ட் - ஜுலை 31- ஆகஸ்ட் 4 - தி ஓவல் மைதானம்