இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி தற்போது ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே, இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்ற நிலையில், மூன்றாவது ஒருநாள் வெற்றி பெற்றாக வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.


அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் மார்ஷ் 96 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 74 ரன்களும் எடுத்திருந்தனர். 


இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களும் எடுத்திருந்தனர். 


353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும்  வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினர். வாஷிங்டன் சுந்தர் தொடக்க வீரராக களமிறங்கியது யாருமே எதிர்பார்க்காத ஒன்றுதான். 


அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 18 ரன்கள் எடுத்து வெளியேற, மறுமுனையில் கேப்டன் ரோஹித் சரவெடி காட்டிக்கொண்டு இருந்தார். கிடைத்த பந்துகளை எல்லாம் பொளந்த ரோகித் சர்மா, அரைசதம் கடந்து அசத்த, 3வது வீரராக களமிறங்கிய விராட் கோலியும் ரன் அடித்து உதவ தொடங்கினார். 


சதம் வரும் என நினைத்து ஆடிய ரோஹித் சர்மா, மேக்ஸ்வெல் வீசிய 21 வது ஓவரில் அவரிடம் கேட்ச் கொடுத்து 81 ரன்களில் நடையைகட்டினார். ரோஹித் பேட்டிங்கில் இருந்து 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் வந்திருந்தது. இவரை தொடர்ந்து விராட் கோலியும் தன் பங்கிற்கு அரைசதம் கடந்து 56 ரன்களில் மேக்ஸ்வெல் பந்திலேயே அவுட்டானார். 


தொடர்ச்சியாக கே.எல்.ராகுல் 26 ரன்களும், சூர்யகுமார் யாதவ், 8 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். 


ரவீந்திர ஜடேஜா மட்டும் சற்று போராடி ஓரளவு 35 ரன்கள் எடுக்க, குல்தீப் யாதவ் 2 ரன்களுடனும், பும்ரா 5 ரன்களுடனும் ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து, கடைசி விக்கெட்டில் இந்திய அணிக்கு 6 பந்துகளில் 67 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி ஓவரின் 4வது பந்தில் சிக்ஸர் தூக்க முயன்ற சிராஜ், 1 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் க்ரீனிடம் கேட்ச் கொடுக்க, ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.