இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கு புதிய கேப்டனாக ரோகித் சர்மா நேற்று அறிவிக்கப்பட்டார். ஏற்கெனவே டி20 போட்டிகளுக்கு அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே விராட் கோலி கேப்டனாக செயல்பட உள்ளார். 


இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்பாக இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா மனம்திறந்து பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் ‘பேக்ஸ்டேஜ் வித் போரியா’ என்ற புதிய நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில், “அஸ்வின் ஒரு சாம்பியன் பந்துவீச்சாளர். அஸ்வினை நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரை பார்த்து வருகிறேன். அவர் டெஸ்ட் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. அனைத்து வகை போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். 


குறிப்பாக ஐபிஎல் தொடரில் அவருடைய எகானமி மிகவும் குறைவான ஒன்று. அவர் 2016 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு பெரிதாக ஒருநாள் அணியில் விளையாடவில்லை. இருப்பினும் அவருடைய திறமை குறையவில்லை. அவர் இன்னும் ஒரு சிறப்பான பந்துவீச்சாளர். அவரை பவர்பிளேவில் பயன்படுத்தலாம், நடு ஓவர்களில் பயன்படுத்தலாம், டெர்த் ஓவர்களிலும் பயன்படுத்தலாம். அப்படி ஒரு பந்துவீச்சாளர் அணியில் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று.






என்னை பொருத்தவரை அஸ்வின் ஒரு ஆல்ரவுண்டர் பவுலர். அதாவது ஆட்டத்தின் அனைத்து சமயங்களிலும் பந்துவீச கூடிய ஒரு ஆல்ரவுண்டர் பந்துவீச்சாளர். ஆகவே அவரை போன்ற ஒருவர் அணியில் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புவேன். அவரை அணியில் வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவருடைய அனுபவம் எப்போதும் அணிக்கு கை கொடுக்கும். எனவே அவர் தொடர்ந்து ஒருநாள், டி20 தொடர்களில் நிச்சயம் மீண்டும் இடம்பிடிப்பார்” எனக் கூறியுள்ளார். 




ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசியாக 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அதன்பின்னர் அவர் 4 ஆண்டுகளாக இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்கவில்லை. முன்னதாக இந்தாண்டு நடைபெற்ற  டி20 உலகக் கோப்பை தொடரில் 4ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வின் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆகவே அதேபோன்று ரோகித் சர்மா தலைமையிலான புதிய ஒருநாள் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இடம்பிடிப்பார் என்று கருதப்படுகிறது. தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரிலேயே அது நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது. 


மேலும் படிக்க: ஐபிஎல் சூதாட்டம் - ரூ. 100 கோடி கேட்ட தோனி வழக்கு ஒத்திவைப்பு