இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்திய அணி உலக சாதனை படைத்தது. மேலும் அந்த தொடரை 3-0 என கைப்பற்றி நம்பிக்கையுடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 


இந்திய நிலவரம்:


விராட் கோலி தனது கடைசி நான்கு ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்களை அடித்து மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ளார். இதன்மூலம் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அடித்த 49 சதங்கள் சாதனையை முறியடிக்க விராட் கோலி காத்திருக்கிறார். ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் போன்ற வீரர்களும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகின்றனர். இதேபோன்று, இந்திய பந்துவீச்சாளர்கள் சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோரும் எதிரணியினரை திணறடித்து வருகின்றனர். சொந்த மண்ணில் விளையாடி வரும் கூடுதல் பலத்துடன், இந்திய அணி, பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


காயம் காரணமாக விலகல்


கே.எல்.ராகுல், அக்‌ஷர் படேல் மற்றும் ஸ்ட்ரேயாஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்கள் மற்றும் காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதன் காரணமாக, இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர், மிடில் ஆர்டரில் இந்திய அணிக்காக விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


நியூசிலாந்து நிலவரம்:


நியூசிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதே உத்வேகத்துடன் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாட உள்ளது. டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பின் ஆலன், கான்வே, பெர்குசன், பிலிப்ஸ், மைக்கேல் மற்றும் பிரேஸ்வெல் ஆகியோர் இந்திய அணிக்கு நெருக்கடி தரக்கூடியவர்களாக உள்ளனர்.


நேருக்கு நேர்


இந்தியா - நியூசிலாந்து அணிகள் இதுவரை 113 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் இந்தியா 55 போட்டிகளிலும், நியூசிலாந்து 50 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிரா ஆனது. 7 ஆட்டங்களில் முடிவு இல்லை. இந்நிலையில், இன்றைய போட்டி  இந்திய நேரப்ப்டி பிற்பகல் 1.30 மணிக்கு ஐதாராபாத்தில் தொடங்க உள்ளது.

உத்தேச இந்திய அணி:


ரோகித் சர்மா, சுப்மன் கில், கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ்/சாஹல்,  ஷமி, சிராஜ், உம்ரான் மாலிக்


உத்தேச நியூசிலாந்து அணி:


பில் ஆலன்,  கான்வே, சாப்மன்/நிகோலஸ், மிட்செல், டாம் லாதம், பிளிப்ஸ்,  பிரேஸ்வெல், சாண்ட்னர், ஷ்ப்லே, டஃப் பிரேஸ்வெல், டஃபி, ஃபெர்கூசன்


இந்தியா அணி நம்.1 ஆக என்ன செய்ய வேண்டும்..? 


ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய அணி 267 ரேட்டிங்குடன் முதலிடத்தில் உள்ளது. ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 110 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 117 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று தொடங்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றால் இந்திய அணி முதலிடத்திற்கு செல்லும்.