ஹைதராபாத்தில் நாளை தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. 


கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று உலக சாதனை படைத்தது. அந்த நம்பிக்கையுடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 


விராட் கோலி தனது கடைசி நான்கு ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்களை அடித்து மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ளார். இதன்மூலம் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அடித்த 49 சதங்கள் சாதனையை முறியடிக்க விராட் கோலி காத்திருக்கிறார். 


இந்தியா அனைத்திலும் நம்.1 ஆக என்ன செய்ய வேண்டும்..? 


ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய அணி 267 ரேட்டிங்குடன் முதலிடத்தில் உள்ளது. ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 110 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 117 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து (113), ஆஸ்திரேலியா (112) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
நாளை தொடங்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றால் இந்திய அணி முதலிடத்திற்கு செல்லும். 


சமீபத்தில் பாகிஸ்தானில் ஒருநாள் தொடரை வென்ற நியூசிலாந்து அணி தற்போது 117 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 110 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் மற்றும் மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி ஆகியோர் தங்கள் பணிச்சுமை காரணமாக இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. அவர்கள் இல்லாத பட்சத்தில், டாம் லாதம் ஒருநாள் தொடரிலும், மிட்செல் சான்ட்னர் அடுத்தடுத்த டி20களிலும் அணியை வழிநடத்துவார்கள். இதனால் இந்திய அணி தொடரை முழுமையாக வெல்ல அதிகமான வாய்ப்பு இருக்கிறது. 


டெஸ்ட் தொடரை பொறுத்தவரை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையில் ஆஸி., அணி 78.57 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அதேசமயம் 2வது இடம் வகிக்கும் இந்திய அணி (58.93 புள்ளிகள்) வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றால் ஆஸ்திரேலியாவின் புள்ளி மதிப்பு 59.6 ஆக குறையும். இந்தியாவின் புள்ளி மதிப்பு  68.05 ஆக உயர்ந்து முதலிடத்தை பிடிக்கும். இதன்மூலம் மூன்று பார்மேட்டிலும் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும். 


இலங்கை அணி 53.33 புள்ளி மதிப்புகளுடன் 3வது  இடத்தில் உள்ளது. இந்த அணி நியூசிலாந்திற்கு எதிராக  விளையாடும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்றால்  61.11 புள்ளி மதிப்பைப் பெறும். 


4வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா  48.72 புள்ளி  மதிப்புடன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 2 போட்டியிலும் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்கா புள்ளி மதிப்பு 55.5 ஆக அதிகரிக்கும். இந்த அணிகளுக்கு சமமாக திகழும். 


ஒருவேளை இந்திய அணி 4 போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றால் அந்த அணியின் புள்ளி மதிப்பு 45.4 ஆக குறையும். ஒரு போட்டியில் மட்டும் வென்றால் 51.39 ஆகவும், இரண்டில் வெற்றி பெற்றால் 56.9 ஆகவும், மூன்று போட்டிகளில் வென்றால்  62.5 ஆகவும் புள்ளிகள் மதிப்பு இருக்கும்.  ஆனால் குறைந்தது  2 போட்டிகளில் வென்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான வாய்ப்பு பிரகாசமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.