புனேவில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தமிழக வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
தமிழக வீரர்களின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இதில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இச்சூழலில் இன்று (அக்டோபர் 24) புனேவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அந்த வகையில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் களம் இறங்கினார்கள். 22 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற டாம் லாதம் 15 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் அசத்தல்:
மற்றொரு தொடக்க வீரரான டேவன் கான்வாய் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால், அஸ்வினின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 141 பந்துகளில் 76 ரன்களை எடுத்திருந்தபோது அவுட் ஆனார். கான்வாயை தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் விளையாடினாலும் 65 ரன்கள் எடுத்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர், அவரது விக்கெட்டை எடுத்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சுழலில் சிக்கி நியூசிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில், 59 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வாஷிங்டன் சுந்தர் கைப்பற்றினார். அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி 259 ரன்களை எடுத்தது. இதை தொடர்ந்து, பேட்டிங்கை இந்திய அணி வீரர்கள் தொடர்ந்தனர். தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்களை எடுத்திருந்தது.
இதையும் படிக்க: ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!