இலங்கை அணியுடனான 2வது டி20 இன்று நடைபெறும் நிலையில் காயம் காரணமாக இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் விலகியுள்ளார். 






இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 


முதல் போட்டியில் இந்திய வீரர்களில் தொடக்க வீரர் இஷான் கிஷன் (37 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் சொதப்பினர். கடைசி நேரத்தில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (29 ரன்கள்), தீபக் ஹூடா( 41 ரன்கள்), அக்சார் படேல் (31 ரன்கள்) எடுக்க 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி தொடக்க முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 






11 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 68 ரன்களில் இலங்கை அணி தசுன் சனகா மற்றும் ஹசரங்காவின் அதிரடி ஆட்டத்தில் வெற்றிக்கு அருகில் சென்று கோட்டை விட்டது. இலங்கை அணியின் ஆட்டத்தை இந்திய ரசிகர்களே பாராட்டினர்.  இந்திய அணியில் அதிகபட்சமாக மாவி 4 விக்கெட்களும், உம்ரான் மாலிக் மற்றும் ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். 


இன்று 2வது டி20 போட்டி 


இந்நிலையில் இன்று இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி புனேவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் விலகியுள்ளார்.  அவர் கடைசி போட்டியிலும் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஸ்கேன் எடுப்பதற்காக மும்பையில் தங்கியிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஜிதேஷ் சர்மா விளையாடுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.  




2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகமாக ஜிதேஷ் அந்த சீசனில் மிடில் ஆர்டரில் களமிறங்கி 163.64 ஸ்ட்ரைக் ரேட்டில் 234 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இலங்கை தொடரில் இடம் பெற்ற இந்திய வீரர்கள்


ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.