உலகில் தலைசிறந்த கிரிக்கெட் அணிகளில் இந்தியா முதன்மையான அணியாக திகழ்கிறது. ரோகித்சர்மா, விராட் கோலி, பும்ரா. சிராஜ், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா என்று திறமையான பல வீரர்கள் அணியில் இருந்தாலும் இந்திய அணி ஐ.சி.சி. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி பல ஆண்டுகளாகி விட்டது.
9 மாதத்தில் தவறவிட்ட 3வது மகுடம்:
குறிப்பாக, தோனி கேப்டன்சிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எந்த இந்திய கேப்டனும் ஐ.சி.சி. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றித் தரவில்லை. இந்த நிலையில், கடந்த 9 மாத காலம் இந்திய கிரிக்கெட் அணிக்கும், இந்திய ரசிகர்களுக்கும் மிகவும் சோகமான காலகட்டமாக அமைந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் என்று கருதிய நிலையில், இந்திய அணி கோப்பையை தவறவிட்டுள்ளது. இதன்மூலம், கடந்த 9 மாதங்களில் மட்டும் இந்தியா தவறவிடும் 3வது ஐ.சி.சி. சாம்பியன் மகுடம் இதுவாகும்.
தலைவலி தரும் ஆஸ்திரேலியா:
கடந்தாண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மகுடத்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் பறிகொடுத்தது. பின்னர், கடந்தாண்டு நவம்பர் 19ம் தேதி நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் மகுடத்தை பறிகொடுத்தது. அந்த 2 டெஸ்ட் போட்டிகளின்போதும் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக பாட் கம்மின்ஸ் இருந்தார்.
இந்த சூழலில், இந்திய அணி 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை பறிகொடுத்தது. கடந்த 9 மாதங்களில் மட்டும் ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையைத் தொடர்ந்து இந்தியா 3 முறை பறிகொடுத்திருப்பது இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் இடையே மனதளவில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்தும் ஆஸ்திரேலியா வசம்:
இருப்பினும், இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் சிறப்பாக ஆடி மீண்டு வரும் என்று ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்திய சீனியர் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இன்றைய தேதியில் கிரிக்கெட் உலகின் நடப்பு டி20 உலகக்கோப்பை தவிர அனைத்து வடிவிலான ஐ.சி.சி. மகுடமும் ஆஸ்திரேலியாவிடமே உள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை, மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை, மகளிர் டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலிய வசம் உள்ளது. இதில், பெரும்பாலான கோப்பைகளுக்கான இறுதிமோதல் இந்தியாவுடன் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs AUS: கடந்த 12 மாதங்களில் 4 உலகக் கோப்பைகள்.. ஐசிசி போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய அணி..!
மேலும் படிக்க: AUS vs WI T20:சர்வதேச டி20...ஹிட்மேன் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்! விவரம் இதோ!