ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது அதிரடி பேட்டிங்கால் அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். இந்தநிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் சதம் அடித்ததன்மூலம் ஒரு பெரிய சாதனையை படைத்தார். 


ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி அடிலெய்டு ஓவல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், மேக்ஸ்வெல் தனது 102வது டி20 சர்வதேச போட்டியில் விளையாடி, 5வது சதத்தை அடித்தார். நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உதவியுடன் 120 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் உலக சாதனையை மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார். இது மட்டுமின்றி சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 5 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்துள்லார். மேக்ஸ்வெல் தனது 94வது இன்னிங்ஸில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 143வது இன்னிங்ஸ்களில்தான் இந்த சாதனையை படைத்திருந்தார். 







இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 57 இன்னிங்ஸ்களில் 4 டி20 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா மற்றும் மேக்ஸ்வெல்லின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உண்டு.


இதுதவிர, கிளென் மேக்ஸ்வெல் டி20 சர்வதேச போட்டிகளில் தனது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரான 120 ரன்களை பதிவு செய்தார். இதன் முன்பு, மேக்ஸ்வெல் இலங்கைக்கு எதிராக 65 பந்துகளில் 145 ரன்கள் எடுத்ததே இவரது அதிகபட்ச ஸ்கோராக இதுவரை உள்ளது. 


4வது இடத்தில் அதிகபட்ச ரன்கள்:


நட்சத்திர ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 55 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 120 ரன்கள் எடுத்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் நான்காவது இடத்தில் விளையாடிய மேக்ஸ்வெல் இன்னிங்சில் 120 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், தற்போது டி20யில் நான்காவது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று, சூர்யகுமார் யாதவின் சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்த சூர்யா 117 ரன்கள் எடுத்திருந்தார். 


போட்டி சுருக்கம்: 


ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி மோசமான தொடக்கத்தை பெற்றது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 22 ரன்களில் அவுட்டாக, ஜோஷ் இங்கிலிஷ் 6 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். மிட்செல் மார்ஷ் 12 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்பின் 4-வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த மேக்ஸ்வெல், அணியின் இன்னிங்ஸை சிறப்பாக ஆடி 55 பந்துகளில் 12 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.


இறுதியாக, 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்தது. 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் வென்றது.