Australia Dominance in ICC Events: கடந்த 12 மாதங்களாக ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய பெண்கள் அணி, ஆஸ்திரேலிய ஆண்கள், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆஸ்திரேலிய அணி என எந்த அணியாக இருந்தாலும் கடந்த ஒரு வருடத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஐசிசி போட்டிகளில் ஆஸ்திரேலியா தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டியுள்ளது. 


நேற்று (பிப்ரவரி 11ம் தேதி) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது. இதன்மூலம், ஆஸ்திரேலியா தொடர்ந்து நான்கு ஐசிசி போட்டிகளில் வென்ற முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. 






டி20 மகளிர் உலகக் கோப்பை: 


கடந்த 2023ம் ஆண்டு நடந்த டி20 மகளிர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி பட்டத்தை வென்றது. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி ஆஸ்திரேலிய மகளிர் அணி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பட்டத்தை வென்றது. 


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 


டி20 மகளிர் உலகக் கோப்பைக்கு பிறகு, ஆஸ்திரேலிய ஆண்கள் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த ஐசிசி பட்டத்தை வென்றது. இந்த சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. ஐசிசி போட்டியில் கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது. 


2023 ஒருநாள் உலகக் கோப்பை: 


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியாவின் வெற்றி ஒருநாள் உலகக் கோப்பையிலும் தொடர்ந்தது.  இந்தப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய ஆண்கள் அணி மீண்டும் இந்திய அணியை வீழ்த்தியது. பரபரப்பான இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் உலகக் கோப்பையை 6வது முறையாக வென்றது. 


19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை:


மகளிர் மற்றும் சீனியர் ஆண்கள் ஆஸ்திரேலிய அணிகளை போலவே, 19 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலிய அணியும் பலத்தை வெளிப்படுத்தியது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து நான்காவது ஐ.சி.சி. கோப்பை வென்றது. இந்த பட்டத்தின் மூலம், ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து நான்கு ஐசிசி போட்டிகளை வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.


84 நாட்களில் இரண்டாவது முறை: 


கடந்த 84 நாட்களில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி பெற்ற இரண்டாவது தோல்வி இதுவாகும். முன்னதாக, 2023 உலகக் கோப்பையில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய சீனியர் அணி 240 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி, உலக கிரிக்கெட் வரலாற்றில் ஆறாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது.