அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்திய டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கம்பீர் வருகைக்கு பிறகு அணியில் மாற்றம்:
கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு இந்திய அணி முதன்முறையாக இலங்கையில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று ஆடுகிறது. அணித் தேர்வு எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்த சூழலில், பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அணித்தேர்வு இருந்தது. அதாவது, டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் பாண்ட்யாவிற்கு பதில் சூர்யகுமார் யாதவிற்கு கேப்டன்சி வழங்கப்பட்டது. ஒருநாள் மற்றும் டி20 இரண்டு தொடர்களிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுப்மன்கில்லுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்திய அணியின் வளரும் வீரர் சுப்மன்கில்லுக்கு துணை கேப்டன்சி வழங்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் திறமையான வீரராகவும், ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்தாலும் அணியில் அவருக்கு சீனியர் வீரர்களாக கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ், பாண்ட்யா ஆகியோர் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்படாமல் சுப்மன்கில்லுக்கு வழங்கியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன், விமர்சனத்தையும் உண்டாக்கியது.
டெஸ்ட்டிலும் சுப்மன்கில்லுக்கு பொறுப்பு:
இந்த நிலையில், டெஸ்ட் அணியிலும் புதிய மாற்றத்தை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்திய டெஸ்ட் அணிக்கு தற்போது ரோகித் சர்மா கேப்டனாகவும், சீனியர் வீரரான பும்ரா துணை கேப்டனாகவும் உள்ளார். இந்திய அணி இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
இதில் ரோகித், விராட் கோலி, ஜடேஜா, அஸ்வின், பும்ரா போன்ற சீனியர் வீரர்கள் அந்த தொடரில் ஆட உள்ளனர். அதற்கு முன்னதாக இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த சூழலில், டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியிலும் புதிய முயற்சியை பி.சி.சி.ஐ. முன்னெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனியர்கள் புறக்கணிப்பு:
அதாவது, இந்திய டெஸ்ட் அணியிலும் துணை கேப்டன் பொறுப்பை சுப்மன்கில்லுக்கு வழங்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை துணை கேப்டன் பொறுப்பை வகித்து வந்த பும்ராவிற்கு பதிலாக அவரை நியமிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக திகழும் பும்ரா துணை கேப்டனாக மட்டுமின்றி இந்திய அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
மூன்று வடிவத்திலான போட்டிகளுக்கும் துணை கேப்டனாக சுப்மன்கில்லை நியமிப்பது, இந்திய அணியின் வருங்கால கேப்டனாக அவரை முன்னெடுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியின் மூன்று வடிவத்திலான போட்டிகளுக்கும் கேப்டனாக அவரை நியமிக்கவே கம்பீரின் ஆலோசனைப்படி பி.சி.சி.ஐ. செயல்பட்டு வருகிறது என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.