ஒருநாள் போட்டிகளில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி, மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலிலும் முதலிடம் வகிக்கிறது.


ஐசிசி தரவரிசைப்பட்டியல்:


ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசியின் தரவரிசைப் பட்டியலில், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மாறி மாறி முதலிடம் பிடித்து வந்தன. அண்மையில் நடந்து முடிந்த ஆசியக்கோப்பை தொடரின் மூலம், முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்தது. ஆனால், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றதால், அந்த வாய்ப்பு தாமதமானது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம், ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்தியா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம், முதலிடத்தில் இருந்த பாகிஸ்தன் அணி இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது.


அனைத்திலும் நம்பர் ஒன்:


ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, தற்போது ஒருநாள் போட்டியிலும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆடவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி, அனைத்து விதமான கிர்க்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெறுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு தென்னாப்ரிக்கா அணி தான் முதன்முறையாக, அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களிலும் முதலிடம் பிடித்து இருந்தது. அந்த வரிசையில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது.






இந்திய அணியின் செயல்பாடு:


டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோப்பையை வெல்லாவிட்டாலும், கடந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி முன்னேறியது. டி-20 கிரிக்கெட்டிலும் வலுவான அணியாக திகழும் இந்தியா, கடந்த ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக்கோப்பையிலும் அரையிறுதிச் சுற்று வரை முன்னேறியது. 2021 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்தியா விளையாடிய, 14 பை-லேட்ரல் தொடர்களில் ஒன்றில் மட்டுமே இந்தியா அணி தோல்வியுற்றது. இதனிடையே, ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த ஆசியக்கோப்பை தொடரை கைப்பற்றியட்து. கடந்த 5 ஆண்டுகளில் உலக நாடுகள் பங்கேற்ற தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது அதுவே முதல்முறையாகும்.


புள்ளிப்பட்டியல்:


01. இந்தியா - 116 புள்ளிகள்


02. பாகிஸ்தான் - 115 புள்ளிகள்


03. ஆஸ்திரேலியா - 111 புள்ளிகள்


முதலிடத்துக்கு உள்ள ஆபத்து:


இந்திய அணி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில், வெறும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் மட்டுமே பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரில் மீதமுள்ள இரண்டு போட்டிகளில், ஒன்றில் வெற்றி பெற்றால் முதலிடத்தை மேலும் வலுவாக இறுகப்பற்றலாம். அதோடு, ஒருநாள் போட்டிகளில் நம்பர் ஒன் அணியாகவும் உலகக்கோப்பை தொடரில் ளமிறங்கும் வாய்ப்பும் இந்தியாவிற்கு கிடைக்கும்.