IND vs AUS 1st ODI Match Highlights: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மொஹாலியில் உள்ள பிந்தரா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணி சார்பில் வார்னர் 52 ரன்கள் சேர்த்திருந்தார்.
277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கியது. இந்திய அணி சார்பில் யார் இன்னிங்ஸை துவங்கப்போகிறார்கள் என்ற கேள்வி இந்திய ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் இந்திய அணியின் இன்னிங்ஸை இளம் வீரர்களான சுப்மன் கில் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் தொடங்கினர். இரண்டு இளம் வீரர்களும் பலமான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சினை துவம்சம் செய்தது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரின் ஓவரிலும் பவுண்டரிகளை விரட்டிக்கொண்டு வந்தது.
முதல் விக்கெட்டுக்கு இந்த இளம் ஜோடி 142 ரன்கள் சேர்த்தது, ஆடம் ஜம்பா பந்து வீச்சில் ருத்ராஜ் தனது விக்கெட்டினை இழந்தார். இதையடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் தனது விக்கெட்டினை ரன் அவுட் முறையில் தேவையில்லாமல் இழந்தார். அதன் பின்னர் கில்லும் தனது விக்கெட்டினை ஆடம் ஜம்பா பந்து வீச்சில் இழக்க அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 151 ரன்களாக இருந்தது. அதன் பின்னர் கைகோர்த்த கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷன் விக்கெட் கொடுக்காமல் ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் நெருக்கடி கொடுத்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் இஷான் கிஷன் தனது விக்கெட்டினை இழந்த பின்னர், சூர்யகுமார் யாதவ் ராகுலுடன் இணைந்து பொறுப்புடன் விளையாடினார். இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் கிடைத்த பந்துகளில் மட்டும் பவுண்டரிக்கு விளாசி அதிகமாக ஒரு ரன், இரண்டு ரன்கள் சேர்ப்பதிலேயே கவனமாக இருந்தது. பொறுப்புடன் ஆடி வந்த சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டினை 50 ரன்கள் சேர்த்த நிலையில் வெற்றிக்கு சொற்ப ரன்கள் இருந்த போது இழந்து வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய ஜடேஜா கே.எல். ராகுலுக்கு ஸ்ட்ரைக் கொடுப்பதில்தான் கவனமாக இருந்தார். இறுதியில் இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் தனது அரைசதத்தினை எடுத்ததுடன், இந்திய அணியை வெற்றியும் பெற வைத்தார்.
இறுதியில் இந்திய அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் ருத்ராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் மற்றும் கே.எல். ராகுல் என 4 வீரர்கள் அரைசதம் விளாசினர்.
இந்த வெற்றியின் மூலம் ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதல் இடம் பிடித்துள்ளது. ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதால், தற்போது மூன்று வகைக் கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.