டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்யும் வகையில், நாளை மும்பையில் திறந்தவெளியில் பேருந்து மூலம் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


உலக கோப்பை:


கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதன் மூலம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்த வெற்றியானது இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தியது. 


இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இருக்கிறது. முன்னதாகவே, இந்திய அணி நாடு திரும்ப இருந்தது. ஆனால் அங்கு நிலவி வரும் கடும் சூறாவளியால் விமானங்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியினர், உலகக் கோப்பையுடன் நாளை இந்தியா திரும்ப உள்ளனர்.


பிரதமர் மோடியின் பாராட்டு:






மேலும், உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டும் வகையில், பிரதமர் மோடி வீரர்களை நேரில் பாராட்டவுள்ளார். 


இந்த பாராட்டு நிகழ்வானது,  நாளை காலை சுமார் 11 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ANI செய்தி முகமை தெரிவித்துள்ளது. 


திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணி:


 இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் சூழலில், அவர்களுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


அவர்களுக்கு மும்பையில், திறந்தவெளியில் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்படும் வகையில் பிரம்மாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது, திறந்தவெளியில் ரசிகர்களின் அன்புமழையில் அழைத்து வரப்படுவார்கள். 


வான்கடே - பாராட்டு விழா:


இதையடுத்து, நாளை மாலை 4 மணிக்கு , மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்திய அணிக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 


சட்டப்பேரவையில் தீர்மானம்:


அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டு தெரிவித்து மகாராஷ்டிர சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.