ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்கள்:


ஐசிசி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்று அசத்தியது. இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா  ஆகியோர் சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள். 


இது ரசிகர்களுக்கு பெரு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது. அதேநேரம் இந்திய அணியின் மூன்று முக்கிய வீரர்கள் டி20 போட்டிகளில் இருந்து விலகியதால் அவர்களது இடத்தை அடுத்து வரும் வீரர்களால் நிரப்ப முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேசியுள்ளார். 


மாற்று வீரர்கள் இருப்பார்கள்:


இது குறித்து பேசிய அவர், “ரோஹித் ஷர்மா டி20 கிரிக்கெட் போட்டிக்கு மிகச் சிறந்த கேப்டனாக விளங்கினார்.
ரோஹித் களத்தில் அறிவுப்பூர்வமாக செயல்படுகிறார். மும்பை இந்தியன்ஸ் அணி ஏன் அவரை கேப்டன் பதவியில் இருந்து மாற்றியது என்பதை என்னால் யோசிக்கக்கூட முடியவில்லை. விராட் கோலியை பொறுத்தவரை அவர் மிகவும் பாராட்டுக்குரிய வீரராக இருக்கின்றார்.


விராட் கோலி நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் தொடர்ந்து விளையாடுவார். தற்போது டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் இவ்விரு வீரர்களும் ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார்கள். ஜடேஜாவை பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கின்றார். தற்போது டி20 போட்டியில் இருந்து விடை பெற்று இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “என்னை பொறுத்தவரை இந்த மூன்று வீரர்களும் இன்னும் நிறைய ஐசிசி கோப்பையை வென்றிருக்க வேண்டும்.



ரோஹித் ஷர்மா தனது முதல் டி20 உலகக் கோப்பையை 2007 ஆம் ஆண்டு வென்றார். அதன் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல அவருக்கு 17 ஆண்டுகள் தேவைப்பட்டு இருக்கின்றது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நிச்சயமாக இந்த மூன்று வீரர்களையும் மிஸ் செய்வார்கள். ஆனால் இவர்களுக்கு மாற்று வீரர்கள் நிச்சயம் இருப்பார்கள். ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் பலர் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.