டெல்லியில் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்று உலக சாதனை படைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


நேற்றை போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் டி20 கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை படைத்திருக்கும். ஆனால், அந்த சாதனையை இந்திய அணி தவறவிட்டது. இதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் அணி டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 12 வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. 2018ம் ஆண்டு  பிப்ரவரி முதல் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரைக்குள் ஆப்கானிஸ்தான் தான் ஆடிய 12 டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது.





இதற்கு அடுத்தபடியாக, இந்திய அணி கடந்தாண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் நியூசிலாந்து அணியுடனான தோல்விக்கு பிறகு ஆப்கானிஸ்தான், நமீபியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை என தான் ஆடிய அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆப்கானிஸ்தானை சமன்செய்த இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி20 கிரிக்கெட் வரலாற்றிலே 13 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைக்கும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது.


இந்திய அணி இமாலய ரன்களை குவித்தபோதும் தென்னாப்பிரிக்காவின் அதிரடியால் இந்திய அணி தோல்வியை தழுவ நேரிட்டது. டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றி பெற்ற அணிகள் பட்டியலில் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ள சமநிலையில் உள்ளன. ஆச்சரியமூட்டும் வகையில் உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிகம் அறியப்படாத ரோமானிய கிரிக்கெட் அணி 2020ம் ஆண்டு அக்டோபர் முதல் செப்டம்பர் 2021ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





இந்திய அணி தென்னாப்பிரக்க அணிக்கு எதிராக தனது அடுத்த போட்டியில் வரும் 12-ந் தேதி கட்டாக்கில் உள்ள பாரபாதி மைதானத்தில் விளையாட உள்ளது. போட்டி நேற்று தொடங்கவிருந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண