டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதன்பின்னர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். டிராவிட்டை தொடர்ந்து இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இச்சூழலில் தான் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீரை பிசிசிஐ நியமித்தது.


புதிய பயிற்சியாளர் கம்பீர்:


பொதுவாக கம்பீர் இந்திய அணியின் வீரராக விளையாடும் பொழுதே களத்தில் ஆக்ரோசமாக இருப்பவர். அணியின் வெற்றிக்காக கடைசி வரை போராடக்கூடியவர். இந்நிலையில் தான் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது ரசிகர்களிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.


இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் சீசனில் 2 ஆண்டு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 1 வருடம் தலைமைப் பயிற்சியாளராக இருந்து அந்த அணிகளை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றவர். 10 வருடங்களுக்கு பிறகு கொல்கத்தா அணி ஐபிஎல் சீசன் 17ல் சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் வீரர்கள் மூன்று வகையான போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார்.  இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒரு சில பார்மட்டில் மட்டுமே கவனம் செலுத்தும் சூழலில் புதிய பயிற்சியாளர் இப்படி கூறியிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 


மூன்று வகையான போட்டிகளிலும் விளையாட வேண்டும்:


இது தொடர்பாக அவர் பேசுகையில், "காயம் ஏற்படுவது என்பது விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையில் ஒரு பகுதி. விளையாட்டின் போது காயம் ஏற்பட்டால் குணமடைந்து விடுவீர்கள். மீண்டும் விளையாடுவீர்கள். ஆனால் வீரர்கள் மூன்று வகையான போட்டிகளிலும் விளையாட வேண்டும். தொழில்முறை கிரிக்கெட் வீரர்களைப் பாருங்கள், உங்களுக்கு மிகச் சிறிய இடைவெளியே கிடைத்துள்ளது. நீங்கள் உங்கள் நாட்டிற்காக விளையாடும்போது உங்களால் முடிந்தவரை விளையாட வேண்டும்.


நீங்கள் நல்ல பார்மில் இருக்கும்போது, ​​மேலே சென்று மூன்று வடிவங்களிலும் விளையாடுங்கள். நேர்மையுடன் முயற்சி செய்து விளையாடுவதற்கு ஒரே ஒரு செய்தி மட்டுமே உள்ளது. ஒரு தொழிலுக்கு உங்களால் முடிந்தவரை நேர்மையாக இருங்கள். நான் மட்டையை எடுத்தபோது, ​​​​நான் முடிவுகளைப் பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை.


முயற்சி செய்யுங்கள்:


நான் அதிக ரன்களை எடுக்க விரும்புகிறேன் முழு உலகமும் உங்களுக்கு எதிராக இருப்பதாக நீங்கள் நினைத்தாலும் முயற்சி செய்யுங்கள், ஆனால் அணியின் நலனுக்காக நீங்கள் சரியானதைச் செய்கிறீர்கள் என்று உங்கள் இதயம் நம்பும்படி செய்யுங்கள். கிரிக்கட் களத்தில் நான் ஆக்ரோஷமாக இருந்தேனா, மக்களுடன் நான் மோதலில் ஈடுபட்டிருக்கிறேனா, இவை அனைத்தும் அணியின் நலனுக்காக மட்டுமே. முயற்சி செய்து அதைச் செய்யுங்கள், ஏனென்றால் இறுதியில் அணிதான் முக்கியம்" என்று இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் கூறியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட உள்ள சூழலில் கம்பீரின் இந்த பேச்சு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.