டிஎன்பிஎல் ஒன்பதாவது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியுடன் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸ்:
முதலில் பேட்டிங்கை தொடங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் 8 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அவருடன் களமிறங்கிய தொடக்க வீரர் கவின் 17 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய விவேக் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ராபின் சிங் பொறுமையாக விளையாடி சேலம் அணிக்கு ரன்களை சேர்த்தார். ராபின் சிங் 23 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் நெல்லை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார். விஷால் வைத்தியம் 12 ரன்களுக்கும், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் கேப்டன் சிஜித் சந்திரன் 20 ரன்களுக்கு ஆட்டம் நடந்தார். முகமது ஆதான் கான் 10 ரன்களுக்கும், சன்னி சந்து 14 ரன்களுக்கும், ஹரிஷ் குமார் 17 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். பொய்யாமொழி ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்மூலம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 19.2 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 141 ரன்களை எடுத்தது. நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய சோனு யாதவ் ஐந்து விக்கெட்டைகளை கைப்பற்றினர். இது அவரது எடுக்கும் முதல் டிஎன்பிஎல் ஐந்து விக்கெட் ஆகும். சிலம்பரசன் இரண்டு விக்கெட்டை கைப்பற்றினர். இம்மானுவேல், மோகன் பிரசாத், ஹரிஷ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இரண்டாவது இன்னிங்ஸ்:
142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான மோஹித் ஹரிஹரன் ரன் எதுவும் எடுக்காமல் அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். நெல்லை அணியன் கேப்டன் அருண் கார்த்திக் 8 பந்துகளில் 11 ரன்களை அடித்து தனது விக்கெட்டை இழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபுறம் அஜித்தேஸ் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். அஜித்தேஸ் 36 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தபோது, அரை சதம் வாய்ப்பைத் தவற விட்டு பெவிலியன் திரும்பினார். நிதானமாக ஆடிய ராஜகோபால் 19 ரன்களுக்கும், ஈஸ்வரன் ஒரு ரன்னிற்கும், ஹரிஷ் 13 ரன்களுக்கும், சோனு யாதவ் 2 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். நெல்லை அணியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய சூரிய பிரகாஷ் 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் 18.5 ஓவர்களில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தி நெல்லை அணி வெற்றி பெற்றது. சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய யாழ் அருண்மொழி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹரிஷ் குமார் இரண்டு விக்கெட்டை கைப்பற்றினார். பொய்யாமொழி மற்றும் சன்னி சந்து தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை எடுத்த சோனு யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.