நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தச் சூழலில் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 


இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 27 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகள் வரலாற்றில் 30ஆவது அரைசதம் கடந்து ரோகித் சர்மா புதிய சாதனை படைத்தார். மேலும் விராட் கோலியின் 29 அரைசதங்கள் என்ற சாதனையை ரோகித் சர்மா முறியடித்தார். 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. 




185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் சற்று அதிரடி காட்டியது. முதல் 2 ஓவர்களில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் ஆட்டத்தின் 3ஆவது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் மிட்செலையும், கடைசி பந்தில் சேப்மெனையும் ஆட்டமிழக்க செய்தார். அதேபோல் ஆட்டத்தின் 5ஆவது ஓவரில் கிளென் பிலிப்ஸை அக்சர் பட்டேல் வீழ்த்தினார். இதனால் 6 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 37 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தவித்தது. 


ஒரு புறம் தொடர்ந்து விக்கெட் விழுந்தாலும் மற்றொரு புறம் அனுபவ வீரர் மார்டின் கப்டில் தொடர்ந்து அதிரடி காட்டி நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 33 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் அரைசதம் கடந்து அசத்தினார். 10 ஓவர்களில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 117 ரன்கள் தேவைப்பட்டது. 




இதன் காரணமாக நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்த கப்டில் முற்பட்டார். அப்போது அவர் சாஹல் பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ் இடம் கேட்ச் கொடுத்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் டிம் சைஃபெர்ட்டும் 17 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.  12 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்து திணறியது. ஆட்டத்தின் 13ஆவது ஓவரில் நீஷமும் 3 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 6  விக்கெட் இழந்து தடுமாறியது.  14ஆவது ஓவரில் கேப்டன் மிட்செல் சான்ட்னரும் ரன் அவுட் ஆக நியூசிலாந்து அணி 84 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து மோசமன தோல்வியை தவிர்க்க போராடியது. இறுதியில் நியூசிலாந்து அணி 17.2 ஓவர்களில் ரன்கள் 111 எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற்றது. 


இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. ரோகித் சர்மா முழு நேர டி20 கேப்டனாக பதவியேற்ற முதல் தொடரில் ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளார்.அதேபோல் ராகுல் டிராவிட் தன்னுடைய இந்திய பயிற்சியாளர் பதவியை சிறப்பாக டி20 தொடர் வெற்றியுடன் துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: அவர் பந்தை பிடிக்கல.. பந்துதான் அவரை பிடிச்சுது : வைரலான சோதியின் கேட்ச் !